2017-12-06 15:19:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 3


டிச.06,2017.  திருஅவையில் கி.பி.325ம் ஆண்டு முதல் கி.பி. 870ம் ஆண்டு வரை நடைபெற்ற முதல் எட்டுப் பொதுச்சங்கங்கள், அக்கால கீழை உரோமைப் பேரரசின் தலைநகராக விளங்கிய கான்ஸ்தாந்திநோபிள் மற்றும், அதையடுத்த நகரங்களிலும் நிகழ்ந்தன. இச்சங்கங்கள், உரோமைப் பேரரசர்களால் கூட்டப்பெற்றன. கிறிஸ்தவ நம்பிக்கை உண்மைகளை வரையறுப்பதே இப்பொதுச்சங்கங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஞாயிறு மற்றும் விழாத் திருப்பலிகளில் சொல்லப்படும் நீசேயா விசுவாச அறிக்கை, திருஅவை வரலாற்றில் முதன் முதலாக நடந்த நீசேயா பொதுச்சங்கத்தில் வரையறுக்கப்பட்டது. இந்த விசுவாச அறிக்கையை, விசுவாசிகளுக்கு அறிவிக்கவும், கான்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கத்தில் ஆரிய தப்பறைக் கொள்கையைத் தோற்கடிக்கவும் காரணமாக இருந்தவர் புனித பெரிய பேசில். மேலும், நீசேயா விசுவாச அறிக்கையைக் காப்பாற்றியவர்களில், புனித பெரிய பேசில் தவிர, அவரின் சகோதரரான, நிசா நகர் புனித கிரகரி, பேசிலின் ஆயுள்கால நண்பரான நாசியானுஸ் நகரின் புனித கிரகரி ஆகிய இருவரும் முக்கியமான திருஅவைத் தந்தையர்களாகக்  கருதப்படுகின்றனர். இவர்கள் மூவரும், மூன்று கப்பதோசியர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

புனித பேசில், தற்போதைய துருக்கி நாட்டிலுள்ள கப்பதோசியா மாநிலத்தின் நிர்வாக மையமான செசாரியாவில், புகழ்பெற்ற செல்வந்தக் குடும்பத்தில், முதல் குழந்தையாக, கி.பி. 330ம் ஆண்டில் பிறந்தார். இவரின் அம்மா புனித எமிலியாவும், தாய்வழி தாத்தாவும், கிறிஸ்துவுக்காக, மறைசாட்சியாகக் கொல்லப்பட்டவர்கள். தந்தைவழி தாத்தா பாட்டிகள், பேரரசர் தியோக்ளேசியன் காலத்தில், போந்தியுஸ் காடுகளில் ஏழு ஆண்டுகள் மறைந்து வாழ்ந்தவர்கள். இவரது தந்தையான பேசில் மற்றும், இவரது உடன் பிறப்புகள் பத்துப் பேரில் ஐவர், புனிதர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். சிறந்த அறிவாளியான புனித பேசில், மெய்யியல், கணிதவியல், வானியல், சுற்றுச்சூழல் இயல், மேடைப்பேச்சு இயல், சட்டயியல் போன்ற எல்லாத் துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஏத்தென்ஸ் நகரில் படித்துக்கொண்டிருந்தபோது, இறையியல் வல்லுனரான நாசியானுஸ் நகரின் புனித கிரகரியைச் சந்தித்தார். இவர்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருந்தனர். கி.பி. 357ம் ஆண்டில் செசாரியா திரும்பிய புனித பேசில், மேடைப் பேச்சுகளில் சிலகாலம் செலவழித்தார். தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைப்பதற்கு, செசாரியா மக்கள் விரும்பினர். ஆனால், புனித பேசில், கடும் தவ வாழ்வில் நுழைந்தார். இவரது வாழ்வு திசை திரும்புவதற்கு, இவரது சகோதரி புனித மக்ரினாவும் முக்கிய காரணம். எனது இளமையை, தேவையற்ற தொழில்களால் வீணாக்கி விட்டேனே என்று, புனித பேசில், பின்னாளில் மனம் வருந்தினார் என்று சொல்லப்படுகின்றது. பேசிலின் அம்மா கைம்பெண்ணான பின்னர், மூத்த மகள் மக்ரினா மற்றும் பல பெண் ஊழியர்களுடன், இவர்கள் குடும்பத்தைச் சார்ந்த இரிஸ் (Iris) நதிக்கரை பண்ணைத் தோட்டத்தில், தவ வாழ்வை மேற்கொண்டனர்.

ஆதீன தவ வாழ்வு மற்றும் துறவு வாழ்வு பற்றிப் படிப்பதற்காகவும், உண்மையின் அறிவைப் பெறுவதற்காகவும், கி.பி.357ம் ஆண்டில், பாலஸ்தீனம், எகிப்து, சிரியா, மெசபத்தோமியா ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அப்பகுதிகளில், ஊரைவிட்டு ஒதுங்கிச் சென்று, கடும் தவ வாழ்வு வாழ்ந்துகொண்டிருந்த மாபெரும் கிறிஸ்தவத் துறவிகளைச் சந்தித்தார். பின்னர் கப்பதோசியா திரும்பி, இத்துறவிகள் போன்று வாழ விரும்பினார். அதனால், தன் சொத்துக்களை, தேவையில் இருப்போருக்குப் பகிர்ந்தளித்துவிட்டு, தன் குடும்பத்தினர் தவ வாழ்வு வாழ்ந்துவந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் பேசிலும், தவ வாழ்வைத் தொடங்கினார். இவரோடு வேறுபல துறவிகளும் சேர்ந்து கொண்டனர். படிப்பு காலத்தில் தான் சந்தித்த, இறையியல் வல்லுனரான நாசியானுஸ் புனித கிரகரிக்கு கடிதங்கள் எழுதினார். இதன் பயனாக, புனித கிரகரியும் இவரின் துறவற ஆதீனத்தில் சேர்ந்தார். மேல் கூரைகளோ அல்லது குளிர்கால நெருப்பு மூட்டும் வசதிகளோ இல்லாமல், இவர்கள் இருவரும் கடும் தவ வாழ்வை மேற்கொண்டனர். எளிய உணவும், மயிர் ஆடையையும் அணிந்த இவர்கள், திருவிவிலியத்தையும், அந்நூல் பற்றி Origen போன்ற தந்தையர்கள் எழுதிய விளக்கவுரைகளையும் ஆழமாக கருத்தூன்றி படிப்பதில் அதிக நேரத்தைச் செலவிட்டனர். மேலும், தன்னோடு வாழ்ந்த இளம் துறவியர் கேட்டுக்கொண்டதன் பேரில், புனித வாழ்வுக்கு, ஒழுங்குமுறைகளை எழுதினார் பேசில். கப்பதோசியா, போந்துஸ் ஆகிய பகுதிகளில், இவரது ஆன்மீக வாழ்வால்  ஈர்க்கப்பட்ட ஏராளமான மக்கள், இவரது துறவு ஆதீனங்களில் சேர்ந்தனர்.

பேரரசர் கான்ஸ்ந்தாந்தியுஸ் ஆட்சிக் காலத்தில் (337-361) ஆரியுஸ் என்பவரின் தவறான கோட்பாடுகள் பரவத் தொடங்கின. எனவே, திருஅவை, புனிதர்கள் பேசில், நாசியானுஸ் புனித கிரகரி ஆகிய இருவரிடமும், ஆரியுசை எதிர்க்கும் பணியை ஒப்படைத்தது. இதனால், செசாரியாவுக்கு திரும்பிய புனித பேசில், கி.பி. 362ம் ஆண்டில், திருத்தொண்டராகவும், இரு ஆண்டுகள் சென்று அருள்பணியாளராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். பேசிலின் ஞானம் மற்றும் அவருக்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட மதிப்பைக் கண்ட செசாரியாவின் ஆயர் யுசேபியுஸ், பேசில்மீது பொறாமை கொண்டார். திருஅவையில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, புனித பேசில்,  துறவு வாழ்வு ஆதீனங்களை அமைப்பதில் தன் கவனத்தைச் செலுத்தினார்.  இதன்பின் புனித பேசில் மீண்டும் செசாரியா திரும்பியதற்கு காரணம் என்ன? கி.பி. 364ம் ஆண்டில் பேரரசர் Valens (364-378) ஆட்சிக்கு வந்தபின் நடந்தது என்ன?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.