2017-12-06 14:46:00

பாசமுள்ளப் பார்வையில்....., : தாய்களுக்கிடையே என்ன வேறுபாடு?


நகுலனுக்கு எப்போதும் தன்  தாயை நினைத்து பெருமைதான். அவன் நண்பர்கள் சிலர் அவனை 'சரியான அம்மா பிள்ளை' என்று கேலிச் செய்வதுண்டு. அதைக் கேலியாக நினைக்காமல், தனக்கு கிடைத்த பெருமையாக எண்ணுவான் நகுலன். ' எங்கள் அம்மாக்கள் செய்யாத எதை உன் அம்மா உனக்காக செய்து விட்டார்கள்' என ஒருமுறை அவன் நண்பர்கள் அவனிடம் கேட்டபோது, அவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. இருப்பினும், அவன் அம்மாதான், அவனைப் பொறுத்தவரையில் எல்லா அம்மாக்களையும் விட உசத்தி. ஒருமுறை அவன் காலனியிலிருந்த குடும்பங்கள் அனைத்தும் இணைந்து கோடைக்கானலுக்கு உல்லாசப் பயணம் சென்றன. இவனும் அவன் தாயுடன் சென்றான். ஏரியில் அனைத்துச் சிறார்களும், பெற்றோரும் படகுச் சவாரிச் செய்தனர். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. படகின் ஒரு பக்கமாக மிக அருகே வந்த வாத்து ஒன்றை அருகில் இருந்து பார்க்க அனைவரும், படகின் ஒரு பக்கத்திற்கு நகர்ந்ததால், படகு சாய ஆரம்பித்தது. நகுலன் உட்பட பல சிறார்கள் ஏரியில் விழுந்து மூழ்கத் துவங்கினர். படகிலிருந்த சில ஆண்கள் தண்ணீரில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயல, யாரையும் எதிர்பார்க்காமல், நகுலனின் தாயும் தண்ணீரில் குதித்து ஒவ்வொரு குழந்தையாக தூக்கி பக்கத்திலிருந்த படகுகளில் கொடுக்க ஆரம்பித்தார். நகுலனையும் யாரோ தூக்கி படகில் கொடுத்தனர். இவன் தாயின் வீரம் இவனை மட்டுமல்ல, இவன் நண்பர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. ஆனால், தன்னை தன் அம்மா காப்பாற்றவில்லை, வேறு யாரோதான் காப்பாற்றினார்கள் என்பதை உணர்ந்தபோது, இவனுக்குள் ஒரு பொறி தட்டியது. அதாவது, தன் தாய் தனக்காக மட்டும் தண்ணீரில் குதிக்கவில்லை என்பது புரிந்தது. தான், தன் தாய்தான் அனைவரையும் விட உயர்ந்தவர் என தனிமைப்படுத்தி சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்க, தன் தாயோ, அனைத்துக் குழந்தைகளும் உயர்ந்தவர்கள், உயிரைவிட மேலானவர்கள் என எண்ணிக் கொண்டிருக்கிறார்களே என மேலும் பெருமைப்பட்டான். எல்லாக் குழந்தைகளையும் தனதாக எண்ணும் தன் தாய்போல், எல்லாத் தாய்களும் உன்னதமானவர்கள்தான் என்பதை உணரத் துவங்கினான் நகுலன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.