2017-12-06 15:15:00

பாலஸ்தீனிய மதத்தலைவர்களைச் சந்தித்த திருத்தந்தை


டிச.06,2017. உரையாடல் வழியே பாலங்களை அமைப்பது, திருஅவைக்கு எப்போதும் மகிழ்வைத் தந்துள்ளது என்றும், குறிப்பாக, பாலஸ்தீன மதத்தலைவர்கள், அறிஞர்களுடன் இந்த முயற்சியை மேற்கொள்வது, கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

திருப்பீட பல் சமய உரையாடல் அவையின் அழைப்பின் பேரில், வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள பாலஸ்தீன பல் சமயப் பிரதிநிதிகளை, இப்புதன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனுக்கும் மனிதருக்கும் இடையே நிகழும் உரையாடலின் ஓர் அடையாளமாக, புனித பூமி விளங்குகிறது என்று கூறினார்.

நாசரேத்தில், கன்னி மரியாவுக்கும், வானதூதர் கபிரியேலுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல், இஸ்லாமியரின் குரானிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், சூழலிலும் உரையாடல்கள் நிகழ்கின்றன என்று குறிப்பிட்டார்.

ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள மதிப்பே, உரையாடல்களுக்கு அடித்தளமாக விளங்குகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலஸ்தீன அரசுத்தலைவர், மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை மீது காட்டிவரும் மதிப்பும், அன்பும் போற்றுதற்குரியது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.