2017-12-08 12:49:00

அன்னை மரியா நம் புகலிடமாக எப்போதும் இருப்பாராக


டிச.08,2017. அமல அன்னை பெருவிழாவாகிய டிசம்பர் 08, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவை, நம் வாழ்வில் எப்போதும் புகலிடமாகக் கொண்டிருப்போம் என்று கூறியுள்ளார்.

 “அன்னை மரியா, நம் புகலிடமாக, நம் ஆறுதலாக, கிறிஸ்துவுக்கு இட்டுச் செல்லும் வழியாக எப்போதும் இருப்பாராக” என்ற சொற்களை, தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

திருத்தந்தை 9ம் பத்திநாதர் (Pius IX) அவர்கள், 1854ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, அன்னை மரியா பாவம் ஏதுமின்றி பிறந்தார் என்பதை, விசுவாச சத்தியமாக அறிவித்தார். அமல அன்னை விழா நாள், இத்தாலி உட்பட பல கத்தோலிக்க நாடுகளில் தேசிய விடுமுறை நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. இப்பெருவிழா, பாலஸ்தீன துறவு ஆதீனங்களில் ஏழாம் நூற்றாண்டிலேயே கொண்டாடப்பட்டுள்ளது.

மேலும், இப்பெருவிழா நாளாகிய இவ்வெள்ளி மாலை 3.30 மணிக்கு, உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று, Salus Populi Romani என்ற, உரோம் மக்களுக்கு குணம் அளிக்கும் அன்னை மரியாவிடம் செபித்து, மாலை 4 மணிக்கு உரோம் இஸ்பானிய வளாகத்திலுள்ள, அமல அன்னை நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அன்னையிடம் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அங்கிருந்து திரும்பும் வழியில், உரோம் sant’Andrea delle Fratte பசிலிக்கா சென்று, அங்கு வணங்கப்பட்டுவரும், அற்புத பதக்க அன்னை மரியாவிடம் செபிக்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் புனித Andrea delle Fratte பசிலிக்காவில், 1842ம் ஆண்டு சனவரி 20ம் நாளன்று, பிரான்ஸ் நாட்டு யூதரான அல்போன்சோ ராட்டிஸ்போனே என்பவருக்கு அன்னை மரியா காட்சியளித்தார். இக்காட்சிக்குப் பின்னர், ராட்டிஸ்போனே அவர்கள், கத்தோலிக்கத்தைத் தழுவி, இயேசு சபையில் சேர்ந்து அருள்பணியாளராகி, மறைப்பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டார். சியோன் நமதன்னை சபையையும் ஆரம்பித்த இவர், யூதர்களைக் கத்தோலிக்கத்திற்கு மாற்றும் பணிக்கும் தன்னை அர்ப்பணித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.