சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

புலம்பெயர்ந்தோர்க்கு அன்பும் அருகாமையும் தேவைப்படுகின்றன

இயேசுவின் திருஇதய மறைபோதக சபையின் அருள்சகோதரிகளைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

09/12/2017 14:51

டிச.09,2017. புலம்பெயரும் மக்களுக்கு, அன்பும், நட்பும், மனிதரின் அருகாமையும், தங்களின் கண்களை உற்றுநோக்கி தாங்கள் சொல்வதைக் கேட்கும் நிலையும் அதிகமாகத் தேவைப்படுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

புலம்பெயர்ந்த மக்களுக்கென தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த, புனித பிரான்செஸ் சேவியர் கபிரினி (Frances Xavier Cabrini) அவர்கள், இம்மண்ணுலக வாழ்விலிருந்து விடைபெற்றுச் சென்ற நூற்றாண்டை முன்னிட்டு, அப்புனிதர் தொடங்கிய, இயேசுவின் திருஇதய மறைபோதக சபையின் ஏறத்தாழ 250 அருள்சகோதரிகளை, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

புனித பிரான்செஸ் கபிரினி அவர்களின் வாழ்வு பற்றி விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புனிதர், ஏழ்மை, வன்முறை ஆகியவற்றால் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்ட மனிதர்களின் துயர்களைத் துடைப்பதற்கு, தன் வாழ்வை அர்ப்பணித்திருந்தார் என்று கூறினார்.

புலம்பெயரும் மக்களுக்கு, நல்ல சட்டங்களும், முன்னேற்ற திட்டங்களும், உதவும் நிறுவனங்களும், இவையனைத்திற்கும் மேலாக, அம்மக்களுக்கு அன்பும், நட்பும் தேவைப்படுகின்றன என்றுரைத்த திருத்தந்தை, இவர்களுக்கு, இறைவனும் தேவைப்படுகின்றார் என்று கூறினார்.

புனித பிரான்செஸ் கபிரினி அவர்கள், இயேசுவின் திருஇதயத்தின்மீது அளவற்ற பக்திகொண்டு, தனது பணியை ஆற்றுவதற்கு சக்தியைப் பெற்றார் என்றும், தங்கள் சபையைத் தொடங்கிய இப்புனிதரின் வாழ்வுமுறையைப் பின்பற்றி, தொடர்ந்து பணியாற்றுமாறும், அச்சபை சகோதரிகளைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பிரான்சிஸ் சவேரியாரைப் பின்பற்றி சீனாவுக்குச் சென்று மறைப்பணியாற்ற விரும்பியவேளை, ‘கிழக்குக்கு அல்ல, மேற்குக்கு’ என்று, திருத்தந்தை 13ம் சிங்கராயர் அவர்கள் இட்ட ஆணைக்குப் பணிந்து அமெரிக்கா சென்ற புனித கபிரினி அவர்கள், ஆன்டெஸ் மற்றும், அர்ஜென்டீனா வரைகூடச் சென்றார், பெருங்கடல் வழியாக 24 முறைகள் பயணம் மேற்கொண்டுள்ளார் என்றும் பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியில் 1850ம் ஆண்டு ஜூலை 15ம் நாளன்று பிறந்த புனித பிரான்செஸ் கபிரினி, தனது 67வது வயதில், 1917ம் ஆண்டு டிசம்பர் 17ம் நாள், சிகாகோவில் இறைபதம் சேர்ந்தார். 1880ம் ஆண்டில், திருஇதய மறைபோதக சபையை ஆரம்பித்த இப்புனிதர், புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர் ஆவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

09/12/2017 14:51