2017-12-09 15:02:00

ஊழல், பணத்தை வழிபடுவதை அடிப்படையாகக் கொண்ட தீமை


டிச.09,2017.  “ஊழலை, மனஉறுதியோடு எதிர்த்துப் போராட வேண்டும். ஊழல், பணத்தை வழிபடுவதை அடிப்படையாகக் கொண்ட தீமையாகும் மற்றும், இது, மனித மாண்பைப் புண்படுத்துகின்றது” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

டிசம்பர் 09, இச்சனிக்கிழமையன்று, உலக ஊழல் எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, இவ்வாறு தன் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, ஊழலை மனஉறுதியோடு எதிர்த்துப் போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

‘முன்னேற்றம், அமைதி மற்றும் பாதுகாப்புக்கு, ஒன்றிணைந்து ஊழலை எதிர்ப்போம்’ என்ற தலைப்பில், 2017ம் ஆண்டின் உலக ஊழல் எதிர்ப்பு நாள் இச்சனிக்கிழமையன்று, கடைப்பிடிக்கப்பட்டது. 

மேலும், இந்நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், சட்ட ஒழுங்கை அடித்தளமாகக் கொண்டும், பொதுமக்களின் ஆதரவோடும், ஒவ்வொரு நாடும், உறுதியான, ஒளிவுமறைவற்ற மற்றும், எல்லா நிறுவனங்களையும் உள்ளடக்கிச் செயல்பட்டால் மட்டுமே, 2030ம் ஆண்டின் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சி இலக்கை எட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், இலஞ்சமாக, ஒரு டிரில்லியன் டாலரும், ஊழல் நடவடிக்கை வழியாக, 2.6 டிரில்லியன் டாலரும் பெறப்படுகின்றன என்று, ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட அமைப்புகள் கூறியுள்ளன.

மேலும், இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்துக்கான நைஜீரிய நாட்டுப் புதிய தூதர் Godwin George Uno அவர்களின் பணி நியமனத்துக்குரிய நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.