2017-12-09 14:22:00

திருவருகைக்காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


மின்னஞ்சல் வழியே பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒரு குறுங்கதை இது: “பளபளப்பான ஓடுகள் பதிக்கப்பட்டத் தரையில் நான் நடந்து சென்றபோது, திடீரென சறுக்கினேன். தடுமாறி விழப்போன என்னை, சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒருவர், தாங்கிப் பிடித்தார். நான் விழுந்திருந்தால், தலையில் பலமாக அடிபட்டிருக்கும். சக்கர நாற்காலியில் இருந்தவர் என்னிடம், ‘நானும் இதேபோல் போன ஆண்டு விழுந்தேன். முதுகுத்தண்டில் பலமாக அடிபட்டதால், இடுப்புக்குக் கீழ் உணர்வற்றுப் போனேன்’ என்று சொன்னார்.”

இது வெறும் கதை அல்ல, ஒவ்வொருநாளும், உலகின் பல்வேறு இடங்களில், பல்வேறு வடிவங்களில், நடக்கும் நிகழ்வு இது. இந்த சக்கர நாற்காலி நாயகனைப்போல், ஆயிரமாயிரம் அன்புள்ளங்கள், தாங்கள் பாதிக்கப்பட்டாலும், அடுத்தவருக்கு உதவிகள் செய்தவண்ணம் உள்ளனர். மனதில் நம்பிக்கை வளர்க்கும் இத்தகைய அழகான நிகழ்வுகள், ஆயிரக்கணக்கில் நடந்தாலும், அவை, ஊடகங்களில் செய்திகளாக வருவதில்லை.

நாம் சிந்தித்த இந்தக் கதை எப்போது 'செய்தி'யாகக் கூடும்? நடந்து சென்றவர், சறுக்கி விழுந்தபோது, அவரைத் தாங்கிப்பிடிக்க, சக்கர நாற்காலி நாயகன் அங்கு இல்லாமல், அவர் கீழே விழுந்து, தலையில் பலமாக அடிபட்டு, இரத்தம் வழிந்தோட, பாதையில் கிடக்கிறார். அவ்வழியே சென்ற யாரும் அவருக்கு உதவி செய்யாததால், அவர் சிறிது நேரத்தில் இறந்து போகிறார் என்றால், அந்த நிகழ்வு, ஒருவேளை செய்தியாகக் கூடும். அதுவும், செய்தித்தாளின் உள்பக்கங்களில் ஏதோ ஒரு மூலையில், இந்த மரணம்பற்றி நான்கு வரிச் செய்தியொன்று பதிவாகியிருக்கும்.

ஒவ்வோருநாளும் உலகெங்கும் நிகழும் கோடிக்கணக்கான உன்னத நிகழ்வுகள் செய்திகளாவதில்லை. ஆனால், ஆயிரத்தில் ஒன்றாக, ஆங்காங்கே நடக்கும் அவலங்கள், செய்திகளாக மாறிவிடுகின்றன. நல்ல செய்திகளைப் புறந்தள்ளிவிட்டு, மோசமான செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் மிகத் தீவிரமாகச் செயல்படுகின்றன. அத்தகையச் செய்திகளையே “மக்கள் விரும்புகிறார்கள்” என்று கூறி, ஊடகங்கள் தங்கள் தவறை மறைத்துவருகின்றன. ஊடகங்கள் ஒவ்வொருநாளும் காட்டிவரும் இருளான உலகை எதார்த்தம் என்று நம்பி, நம்பிக்கையிழந்து போகிறோம்.

ஊடகங்கள் நம்மீது திணிக்கும் அவலங்கள் போதாது என்று, நம் கைவசம் இருக்கும் 'whatsapp' போன்ற செயலிகள் வழியே, நம்பிக்கையைக் குலைக்கும் செய்திகளை நாமும் பகிர்ந்து வருகிறோம். நம் செல்லிடப்பேசிக்கு வரும் செய்திகள், உண்மையான செய்திகள்தானா என்பதையும் அறிந்துகொள்ள முயற்சி செய்யாமல், நம்பிக்கையைக் குலைக்கும் செய்திகளையும், வதந்திகளையும் நாம் பகிர்ந்துவருகிறோம்.

ஒரு சில வேளைகளில், நல்ல செய்திகள் வெளிவந்தாலும், அவற்றை, தங்களுக்குச் சாதகமாகத் திரித்து, பரபரப்பானச் செய்திகளாக மாற்றுவதில், ஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்துகின்றன. டிசம்பர் 9, இச்சனிக்கிழமை, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தேர்தல்கள் துவங்கியுள்ளன. இந்தத் தேர்தலில், மக்கள், குறிப்பாக, கத்தோலிக்க மக்கள், மனசாட்சியைப் பயன்படுத்தி, நல்ல தலைவர்களைத் தெரிவு செய்யவேண்டுமென்றும், தேர்தலை முன்வைத்து, செபமாலை பக்தி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அம்மாநிலத்தில் பணியாற்றும் பேராயர் தாமஸ் மக்வான் அவர்கள், மக்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியிருந்தார்.

மனசாட்சியைப் பயன்படுத்துதல், செபமாலை சொல்லுதல் ஆகியவை உண்மையிலேயே மிக நல்ல செய்திகள், அறிவுரைகள். ஆனால், ஆயர் எழுதிய இந்த மடல், ஆளும் கட்சிக்கு எதிரானது என்றும், வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்றும் சொல்லவிரும்பிய ஓரிரு ஊடகங்கள், அந்த மடலில் சொல்லப்படாத பல அர்த்தங்களைத் திணித்து, பேராயரை குற்றவாளியாக்கிவிட்டன. செய்திகளை நடுநிலையாகத் தருவதாக கூறிக்கொள்ளும் ஊடகங்கள், செய்திகளைத் திரித்துச் சொல்வதில் கருத்தாய் இருப்பதுடன், நல்ல செய்திகளைத் தருவோரை வேட்டையாடி வருவதும், இன்றைய நிலை.

ஊடகங்கள் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் வழிகளைப் புரிந்துகொள்ளவும், நம்மிடையே செய்திகள் பகிர்ந்துகொள்ளப்படும் முறைகளைச் சீர்திருத்தவும், திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு, நமக்கொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. மாற்கு நற்செய்தியின் தொடக்கம், நமது வழிபாட்டின் மையக்கருத்தாகத் தரப்பட்டுள்ளது. “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்” (மாற்கு 1:1) என்ற இந்த அறிமுகச் சொற்கள், நம் சிந்தனையைத் தூண்டுகின்றன.

“இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்” என்று பிரமாதமாக ஆரம்பமாகும் அறிமுக வரியைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி சொல்லப்படும் என்று நாம் எதிர்பார்க்கும் வேளையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், திருமுழுக்கு யோவான் அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் சொல்லும் வார்த்தைகளும், பாவமன்னிப்பு, மனமாற்றம் என்று முழக்கமிடுகின்றன.

மேலோட்டமாகப் பார்த்தால், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி என்று மாற்கு ஆரம்பித்ததற்கும் அவர் தொடர்ந்து சொல்வதற்கும் தொடர்பில்லாமல் இருப்பதைப் போல் தோன்றுகிறது. ஆனால், சிறிது ஆழமாகச் சிந்தித்தால், மன்னிப்பு, மனமாற்றம், மறுவாழ்வு ஆகியவைகளே, இயேசு கிறிஸ்து உலகிற்குக் கொண்டு வந்த நற்செய்தி என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

மனவருத்தம் கொள்வது, மன்னிப்புப் பெறுவது, மனமாற்றம் அடைவது, மறுவாழ்வில் நுழைவது... இவை ஒவ்வொன்றும் மதிப்புள்ளவை. இவை ஒவ்வொன்றையும் தங்க வளையங்களாக நாம் கற்பனை செய்து பார்க்கலாம். இந்தத் தங்க வளையங்கள் தனித்து நின்றால் ஓரளவு மதிப்பு உண்டு. ஆனால், இவ்வளையங்கள் அனைத்தும் இணைந்து ஒரு சங்கிலியாக உருவானால், இவற்றின் மதிப்பு பலமடங்கு உயரும். ஓர் எடுத்துக்காட்டுடன், இந்தச் சங்கிலித் தொடரின் உயர்வை புரிந்துகொள்ள முயல்வோம்.

நாம் இன்னொருவருக்கு எதிராகத் தவறு செய்துவிட்டோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் செய்த தவறை உணர்ந்து மனம் வருந்துகிறோம். தவறை உணர்ந்து வருந்துவது நல்ல பண்புதான். ஒரு தங்க வளையம்தான். சந்தேகமில்லை. அத்தோடு நாம் நின்றுவிட்டால், பயனில்லை. நாம் தவறு இழைத்தவரிடம், நம் மனவருத்தத்தைச் சொல்லி, மன்னிப்பு பெறவேண்டும். மன்னிப்பு என்பதும், அழகான ஒரு தங்க வளையம்தான். ஆனால், மன்னிப்பு பெற்றதோடு நின்றுவிட்டால், மீண்டும் பயனில்லை. தவறுகள் தொடர்வதற்கு வாய்ப்புக்கள் இருக்கும். எனவே, மன்னிப்பைத் தொடர்ந்து, நாம் மனமாற்றம் அடையவேண்டும். நாம் மனமாற்றம் அடைந்துள்ளோம் என்பது எவ்வாறு வெளிப்படும்? நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்குவோம், நம்மைச் சார்ந்தவர்கள் வாழ்விலும் மாற்றங்களை உருவாக்க முயல்வோம். இந்த மாற்றங்கள் புதியதொரு வாழ்வை, மறுவாழ்வை, உருவாக்கும்.

மனவருத்தம், மன்னிப்பு, மனமாற்றம், மறுவாழ்வு... இவை நான்கும் இணைந்து, உலகில் மாற்றங்களை உருவாக்கிய பல வரலாற்று நிகழ்வுகளை கேள்விப்பட்டிருக்கிறோம். அவற்றில் ஒன்று, அயர்லாந்தில் நிகழ்ந்த மாற்றம்.

பிரித்தானிய அடக்குமுறையை எதிர்த்து, தன் விடுதலைக்காக, இந்தியா போராடியதுபோலவே, அயர்லாந்தும் போராடியது. இந்தப் போராட்டங்களின் உச்சக் கட்டத்தில், அயர்லாந்து குடியரசுப் படை - Irish Republican Army (IRA) - என்ற புரட்சிக் குழு உருவானது. இந்தப் புரட்சிக் குழுவில் ஒருவராக தன் 15வது வயதில் சேர்ந்தவர், Shane Paul O'Doherty. பலவகை வெடிகுண்டுகள் செய்வதில் தன் அறிவுத்திறன், ஆற்றல், இளமை அனைத்தையும் செலவிட்டார் ஷேன். பிரித்தானிய அரசுக்கு எதிராக இவர் காட்டிய வெறுப்பும், எதிர்ப்பும், கடித வெடிகுண்டுகளாக வடிவெடுத்தன. 1973ம் ஆண்டு அவர் அனுப்பிய கடித வெடிகுண்டுகள் பல ஆங்கிலேயக் குடும்பங்களைச் சிதைத்தன.

இவரது குற்றம் வெளிச்சத்திற்கு வந்தபோது, இவர் கைது செய்யப்பட்டார். 1976ம் ஆண்டு, 21வது வயதுநிறைந்த ஷேன் மீது 31 கொலை குற்றங்கள் சுமத்தப்பட்டு, அவருக்கு 30 ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன. வழக்கு மன்றத்தில் இவருக்கு எதிராக 14 பேர் சாட்சி சொல்ல வந்திருந்தனர். அவர்களில் பலர், இவர் அனுப்பிய கடித வெடிகுண்டுகளால், தங்கள் உடல் உறுப்புக்களை, அல்லது, நெருங்கிய ஓர் உறவை இழந்தவர்கள். தன்னால் சிதைக்கப்பட்ட அவர்களை, நீதிமன்றத்தில் சந்தித்தது, தன்னை அதிகம் பாதித்தது என்று, ஷேன் அவர்கள், தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த நீதிமன்றத்தில் ஆரம்பமானது, இவரது மன வருத்தமும், மன மாற்றமும்.

தொடர்ந்து இவர் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது, தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தனித்தனியே கடிதங்கள் அனுப்பினார். இம்முறை, அக்கடிதங்கள், வெடிகுண்டுகளுக்குப் பதில், அவர் மனதிலிருந்து எழுந்த வருத்தம், மன்னிப்பு கோரிக்கை ஆகியவற்றைச் சுமந்து சென்றன. கடித வெடிகுண்டுகள் வழியே, புரட்சியை உருவாக்கலாம் என்று ஷேன் எண்ணினார். ஆனால், அவர் உருவாக்கியதேல்லாம் வேதனைகளே. இப்போது அவர் அனுப்பிய இந்தக் கடிதங்கள், ஒரு வகையில், புரட்சியை ஆரம்பித்து வைத்தன. தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரில் பெற முடியாத மன்னிப்பை, இறைவனிடம் வேண்டினார். மனமாற்றம் பெற்றார். ஒவ்வொரு நாளும் சிறையில் விவிலியத்தை வாசித்தார். 14 ஆண்டுகள் கழித்து, ஷேன் விடுதலை அடைந்தார்.

சிறையை விட்டு அவர் வெளியேறியபோது, ஒரே ஒரு தீர்க்கமான எண்ணத்துடன் வெளியேறினார்... சிறையில் தான் அடைக்கப்பட்டபோது தன் மனதைத் திறந்து உள்ளே நுழைந்த இறைவன், தன் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கியதைப் போல், வெறுப்பென்ற சிறைக்குள் தங்களையே பூட்டிவைத்திருக்கும் அயர்லாந்து மக்களிடம் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன், ஷேன் அவர்கள், சிறையிலிருந்து வெளியேறினார். அயர்லாந்து மாற்றம் அடைய வேண்டுமென்றால், பிரித்தானிய அடக்கு முறையால் ஏற்பட்ட கடந்த காலக் காயங்களிலேயே அந்நாடு வாழாமல், எதிர்காலத்தை உருவாக்க என்ன செய்யமுடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும் என்று ஷேன் உணர்ந்தார். இந்த உண்மையை அவர் பேச ஆரம்பித்தார். வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இதைப்பற்றி அவர் பேசி வந்தார். அவர் கூறிய எண்ணங்கள் நன்மையை விளைவித்த அதே வேளையில், எதிர்ப்புக்களும் எழுந்தன. எனினும், அவர் தன் நிலைப்பாட்டிலிருந்து விலகாமல் துணிந்து சென்றார். அவர் கொண்ட நிலைப்பாட்டை, தன் சுயசரிதையில், இவ்விதம் கூறுகிறார்:

"'இறந்த காலத் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதற்குப் பதில், இறைவன் தரும் எதிர்காலத்தை நான் நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்கிறேன்' என்று ஒருவர் சொல்ல ஆரம்பித்தால் போதும்... அந்த எண்ணம் சிறிது சிறிதாக அடுத்தடுத்த மனிதரை பற்றிக்கொள்ளும். எந்த ஒரு நாட்டிலோ, அல்லது சமுதாயத்திலோ, தனி மனிதர் ஒருவர் அடையும் மாற்றம்தான் அடுத்தவர்களை ஒவ்வொருவராக மாற்றுகிறது." இதுவே Shane Paul O'Doherty அவர்களின் தாரக மந்திரமானது.

இதுவே இன்று திருமுழுக்கு யோவானிடமிருந்தும் நாம் கேட்கும் செய்தியாக உள்ளது. Shane அவர்களுக்கும் திருமுழுக்கு யோவானுக்கும் இடையே பல ஒப்புமைகளை நாம் காணமுடியும். இருவருமே, தங்கள் நாடு விடுதலை பெற வேண்டுமென்ற வேட்கையில், முதலில் புரட்சி வழிகளைச் சிந்தித்தவர்கள். பின்னர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, மனமாற்றம் பெற்று, தங்கள் வாழ்வையே மாற்றியவர்கள். மற்றவர்களையும் மாறும்படித் தூண்டியவர்கள்.

இறைவனை எதிர்பார்த்து காத்திருக்கும்  இந்தத் திருவருகைக் காலத்தில் நாமும் இறைவனால் முழுமையாக ஆட்கொள்ளப்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம். திருமுழுக்கு யோவானைப் போல், Shane Paul O'Dohertyஐப் போல் இறைவனால் முழுமையாக ஆட்கொள்ளப்படுவதற்கு, மனவருத்தம், மன்னிப்பு, மனமாற்றம், மறுவாழ்வு ஆகிய படிகளில் ஏறிச்செல்லும் துணிவும், பக்குவமும் பெற இறையருளை இறைஞ்சுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.