2017-12-11 15:31:00

ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்டோருடன் திருத்தந்தையின் அருகாமை


டிச.11,2017. இந்தியாவில் ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை, குறிப்பாக, இதில் காணாமல்போயுள்ள ஏராளமான மீனவர்களின் குடும்பங்களை சிறப்பாக நினைவுகூர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரைக்குப் பின்னர், தென் இந்தியாவின் ஒக்கிப் புயல் பாதிப்புகள் பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை, ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுடன், குறிப்பாக மீனவ குடும்பங்களுடன் தன் அருகாமையை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனித உரிமைகள் நாளை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று,  நார்வே நாட்டு ஓஸ்லோவில், அணு ஆயுதங்கள் ஒழிப்புக்காக உழைக்கும் பன்னாட்டு நிறுவனத்திற்கு இவ்வாண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது, மனித உரிமைகளுக்கும், அணு ஆயுதங்கள் ஒழிப்புக்கும் இடையிலுள்ள வலுவான தொடர்பை கோடிட்டு காட்டுகின்றது எனவும் தெரிவித்தார்.

அனைத்து மக்களின், குறிப்பாக, வலுவற்றவர்கள் மற்றும் வாய்ப்பிழந்தவர்களின் மாண்பைப் பாதுகாப்பதற்குப் பணியாற்றுவதென்பது, அணு ஆயுதங்களற்ற உலகை அமைப்பதற்கு உழைப்பதாகும் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, கடவுள் நம்மிடம் கொடுத்துள்ள திறமைகளைக் கொண்டு, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை ஒன்றிணைந்து கட்டி எழுப்புவோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

இவ்வாண்டின் அமைதி நொபெல் விருதைப் பெற்றுள்ள International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) எனப்படும் இந்நிறுவனம், அணு ஆயுதங்கள் ஒழிப்புக்கென, ஜெனீவாவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு, 101 நாடுகளில், 468 அரசு-சாரா அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றது. ஹிரோஷிமாவில் அணுகுண்டு போடப்பட்டதைப் பார்த்த 85 வயது நிரம்பிய Setsuko Thurlow என்பவரும் இவ்வாண்டின் அமைதி நொபெல் விருதைப் பகிர்ந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.