2017-12-11 15:39:00

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை


டிச.11,2017. நாம் செய்யத்தவறியவற்றால் உருவாகியுள்ள வெற்றிடங்களை நிரப்பி, வீண் பெருமையின் விளைவுகளை சரிசெய்து, இயேசுவின் வருகைக்கு நம்மைத் தயாரிப்போம் என்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நண்பகல் வழங்கிய மூவேளை செப உரையில், வாழ்வில் வெற்றிடங்கள் உருவாவதற்கு இரு காரணங்கள் உள்ளன என்று எடுத்துரைத்தார்.

செபம் செய்யாமலிருத்தல், தேவையில் இருப்போருக்கு பிறரன்புப் பணிகள் வழியே உதவாமல் இருத்தல் ஆகிய இரண்டும் வெற்றிடங்களுக்குக் காரணங்கள் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இறைவன் வருகைக்கு நம்மையே தயாரிக்கும் வேளையில், தாழ்ச்சியுடன் செயல்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திக் கூறினார்.

மனம் திரும்புதலுக்கு, திருமுழுக்கு யோவான் விடுத்த அழைப்பு குறித்துப் பேசும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மேற்கோள்காட்டி மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, நாம் காத்திருக்கும் நம் மீட்பர், இறைவனின் அன்பை நம் மீது பொழியும் தூய ஆவியாரின் வல்லமையால் நம் வாழ்வை மாற்றவல்லர் என்று கூறினார்.

தூய ஆவியாரின் வல்லமையால் ஆட்கொள்ளப்பட்ட அன்னை மரியா, எவ்வாறு மீட்பரின் வருகைக்காக தன்னையே தயாரித்தாரோ, அதேபோன்று நாமும், இத்திருவருகைக்காக தயாரிக்க, அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் என்று, தன் மூவேளை செப உரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.