2017-12-11 15:27:00

நோயாளிகளுக்கு திருஅவை ஆற்றும் பணிகள் தொடர...


டிச.11,2017. இயேசுவின் கட்டளைக்கு விசுவாசமாக இருந்து, புதுப்பிக்கப்பட்ட உணர்வுடன், நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு பணிபுரிவோர்க்கு திருஅவை ஆற்றும் சேவை தொடர வேண்டும் என, வரும் ஆண்டின் நோயாளர் தின செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11ம் தேதி லூர்து அன்னை திருவிழாவன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் உலக நோயாளர் தினத்தையொட்டி, 2018ம் ஆண்டின் இத்தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அம்மா, இவரே உம் மகன், இவரே உம் தாய். அந்நேரம் முதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்' என்று இயேசு சிலுவையில் கூறிய நிகழ்வு, இந்நாளுக்கான தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளதை தன் செய்தியின் துவக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயேசுவின் இவ்வார்த்தைகள், மனிதகுலமனைத்தின் தாயாக, அன்னை மரியாவுக்கு கிட்டியுள்ள அழைப்பை வெளிப்படுத்துவதாக உள்ளன என அச்செய்தியில் கூறும் திருத்தந்தை, திருஅவை மற்றும் மனிதகுலம் மீது இயேசு கொண்டுள்ள அக்கறையில் அன்னை மரியாவும் பங்குபெறுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

காலம் காலமாக, திருஅவை, நோயாளிகளுக்கு ஆற்றிவருவது, மருத்துவச் சேவை மட்டுமல்ல, அது மனிதர்களை மையமாகக் கொண்டு ஆற்றும் பணி என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளத் திருத்தந்தை, பிறரன்பு பணிகளை ஆற்ற, ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைப்புப் பெற்றுள்ளார் என்பதையும், நோயாளர் தினச் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.