சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ இந்தியா, இலங்கை

ஒக்கிப் புயலை இயற்கைப் பேரிடர் என அறிவிக்குமாறு வலியுறுத்தல்

ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய கோரி கேரளாவில் ஆர்ப்பாட்டம் - REUTERS

12/12/2017 16:35

டிச.12,2017. ஒக்கிப் புயல், இயற்கைப் பேரிடர் என்று அறிவிக்கப்படுமாறும், இப்புயலால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுமாறும், கேரளாவின் பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசை விண்ணப்பித்துள்ளனர்.

ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, டிசம்பர் 10ம் தேதி செபமும், டிசம்பர் 11ம் தேதி பேரணியும் நடத்தி, கேரள மாநில ஆளுனர் அலுவலகம் வரை சென்று, அவ்விடத்தில் செபித்து, மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர், திருவனந்தபுரம் இலத்தீன் வழிபாட்டுமுறை உயர்மறைமாவட்ட கத்தோலிக்கர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிட்டு, உடனடி நிவாரண நடவடிக்கைகளை எடுக்குமாறும் கத்தோலிக்கர் வலியுறுத்தியுள்ளனர்.

நவம்பர் 30ம் தேதி, தென்னிந்திய கடற்கரைப் பகுதியைத் தாக்கிய ஒக்கிப் பயலில் 207 வீடுகள் முழுவதுமாகவும், மேலும் 2,753 வீடுகளும் சேதமடைந்துள்ளன. 5656 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 159 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும், 2053 ஹெக்டேர் நிலங்களில் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால், 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

ஒக்கிப் புயல் பாதிப்புக்குப்பின், தற்போதுள்ள நிலைமையை வத்திக்கான் வானொலியில் விளக்கிய, திருவனந்தபுரம் பேராயர் சூசை பாக்யம் அவர்கள், ஒக்கிப் புயல் குறித்து, சரியான முன்னறிவிப்பு இல்லாததே, இவ்வளவு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் என்றும் கூறினார்.

திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட சமூகத் தொடர்பு பணிக்குழுவின் செயலர் அருள்பணி தீபக் ஆன்டோ அவர்கள் பேசுகையில், திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டமும், கோட்டாறு மறைமாவட்டமும், மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் சேர்ந்து, காணாமல்போனவர்களைத் தேடும் பணிகளிலும், இடர்துடைப்புப்  பணிகளிலும் ஈடுபட்டுள்ளன என்று கூறினார்.

இதற்கிடையே, கேரள அரசு 18.34 பில்லியன் ரூபாய் உதவிக்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது என்று ஆசியச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி

12/12/2017 16:35