2017-12-12 16:28:00

கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடத்த வேண்டும்


டிச.12,2017. ஒக்கிப் புயலில் காணாமல்போன மீனவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்று, கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகளை நடத்த வேண்டுமென்று, தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சை கத்தோலிக்க இளையோர் இயக்கம் மற்றும் குடும்பநலப் பணிக்குழு சார்பில், சமுதாயத்தில் நலிவடைந்த பெண்களுக்கென கிறிஸ்மஸ் பெருவிழா தஞ்சை திருஇருதய பேராலய மக்கள் மன்றத்தில் நடத்தப்பட்டது. இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசிய ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள், ஒக்கிப் புயலால் குமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை, சிலர் சடலங்களாகவே மீட்கப்பட்டுள்ளனர், இந்த துயர நிகழ்வு குமரி மாவட்டத்தை மட்டுமல்லாமல் நம் எல்லாரையுமே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறினார்.

யாரும் எதிர்பாராமல் நடந்த இந்த இயற்கைச் சீற்றத்தில் இறந்துபோன நம் சகோதரர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகச் செபிப்போம் எனவும், ஒக்கிப் புயலில் காணாமல்போன மீனவர்கள் அனைவரும் வீடு திரும்பவும், அவர்கள் குடும்பங்களோடு மகிழ்ந்திருக்கவும், குமரி மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பவும் ஒவ்வோர் ஆலயத்திலும் சிறப்பு செபங்கள் நடத்தவும் வேண்டுமென்றும் ஆயர் கூறினார்.

இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பெருவிழாக் கொண்டாட்டங்களில் ஆடம்பரங்களைத் தவிர்த்து, எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்றும் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.