2017-12-12 15:33:00

பாசமுள்ள பார்வையில்: மனித உரிமைகள், நமக்கு மிக அருகில்...


1948ம் ஆண்டு, டிசம்பர் 10ம் தேதி, அதிகாலை, 3 மணிக்கு, பாரிஸ் மாநகரில் கூடியிருந்த ஐக்கிய நாடுகள் அவை, மனித உரிமைகள் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் அவைக் கூட்டங்களில், அதுவரை இடம்பெறாத ஒரு நிகழ்வு, அன்று இடம்பெற்றது. அதாவது, அந்த அவையில் கூடியிருந்த அத்தனை உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று, கரவொலி எழுப்பினர், ஒரு பெண்மணிக்காக. அந்தப் பெண்மணியின் பெயர், எலியனோர் ரூசவெல்ட் (Eleanor Roosevelt).

1933ம் ஆண்டு முதல், 1945ம் ஆண்டு முடிய, அமெரிக்க அரசுத்தலைவராகப் பணியாற்றிய பிராங்க்ளின் ரூசவெல்ட் (Franklin D. Roosevelt) அவர்களின் மனைவி, எலியனோர் ரூசவெல்ட் அவர்கள், 1945ம் ஆண்டு முதல், 1952ம் ஆண்டு முடிய ஐக்கிய நாடுகள் அவையில் பணியாற்றியபோது, மனித உரிமைகள் அறிக்கையை வடிவமைத்த குழுவுக்குத் தலைவராகப் நியமிக்கப்பட்டார். மனித உரிமைகள் அறிக்கை உருவாக, அவரும், அக்குழுவினரும் மேற்கொண்ட அயராத உழைப்பை உலகம் பாராட்டியது.

மனித உரிமைகள் குறித்து, எலியனோர் ரூசவெல்ட் அவர்கள் கூறியுள்ள கருத்து, மனித உரிமைகள் பற்றிய நம் சிந்தனைகளுக்கு சவாலாக அமைகின்றது: "மனித உரிமைகள் எங்கிருந்து துவங்குகின்றன? மிகச் சிறிய இடங்களில், நமக்கு மிக அருகில், இவை துவங்குகின்றன. இந்த இடங்கள் நமக்கு மிக அருகில் இருப்பதால், உலக வரைப்படத்தில் இவை இடம் பெறுவதில்லை... நமக்கு நெருக்கமான இந்த இடங்களில், மனித உரிமைகளுக்கு அர்த்தம் இல்லையெனில், உலகில் வேறெங்கும் இந்த உரிமைகளுக்கு அர்த்தம் இருக்காது. நமக்கு மிக அருகில், நம்மைச் சுற்றி, இந்த உரிமைகளை நிலைநாட்ட, நாம் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளவில்லையெனில், பரந்துவிரிந்த உலகில் மனித உரிமைகள் முன்னேற்றம் அடையாது."

மனித உரிமைகள் அறிக்கை வெளியானதன் 70ம் ஆண்டை, டிசம்பர் 10ம் தேதி துவங்கியுள்ளோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.