2017-12-13 16:11:00

'Populorum progressio' வெள்ளி விழா - திருத்தந்தையின் செய்தி


டிச.13,2017. 'மக்களின் முன்னேற்றம்' என்று பொருள்படும் 'Populorum progressio' என்ற அறக்கட்டளை, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் 4,400க்கும் மேற்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பணியாற்றிவரும் 'Populorum progressio' என்ற அறக்கட்டளை, தன் வெள்ளி விழா ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், உரோம் நகரில் மேற்கொண்ட ஒரு கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இறைவனின் அன்பையும், கத்தோலிக்கத் திருஅவையின் தாய்மை நிறைந்த பிரசன்னத்தையும் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக, வறியோருக்கு வெளிப்படுத்தும் ஓர் அடையாளமாக, அறக்கட்டளை செயலாற்றி வருகிறது என்று திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.

டிசம்பர் 12, 13 ஆகிய இருநாள்கள், உரோம் நகரில் நடைபெற்ற வெள்ளிவிழாக் கூட்டத்தை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை ஏற்பாடு செய்திருந்தது.

மேலும், "இறைவனிடமிருந்து வரும் ஒளியால், இவ்வுலகின் எதார்த்தங்களை வெளிச்சமாக்கும் பணியில், உறுதியுடன் உழைக்க, கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.