2017-12-13 16:25:00

கத்தோலிக்கருக்கு பாராட்டுகள் - இந்திய துணை அரசுத்தலைவர்


டிச.13,2017. இந்திய நாட்டை கட்டியெழுப்புவதிலும், பிறரன்புப் பணிகளிலும் கத்தோலிக்கத் திருஅவை எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று இந்திய துணை அரசுத்தலைவர், வெங்கையா நாயுடு அவர்கள் கூறியுள்ளார்.

இந்திய ஆயர் பேரவை, டில்லியில் ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு உரை வழங்கிய வெங்கையா நாயுடு அவர்கள், கிறிஸ்துவின் பிறப்பு, உலக மக்கள் அனைவருக்கும், அமைதியைக் கொணர்ந்துள்ளது என்று கூறினார்.

இந்திய நாடெங்கும், மிகச் சிறந்த கல்விக்கூடங்களை நிறுவியுள்ள கத்தோலிக்கர்கள், கல்வியின் தேவையை இந்நாட்டிற்கு உணர்த்தியுள்ளனர் என்று, இந்தியத் துணை அரசுத்தலைவர் எடுத்துரைத்தார்.

சமுதாய மாற்றத்திற்கு மிகவும் அவசியமான கல்வித் துறையிலும், உடல் நலத்துறையிலும் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள், குறிப்பாக, மிக வறியோர் நடுவே ஆற்றிவரும் பணிகள் பாராட்டுக்குரியன என்று, வெங்கையா நாயுடு அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், கிறிஸ்து பிறப்பு காட்சியைச் சித்திரிக்கும் உருவங்களை இந்தியத் துணை அரசுத்தலைவருக்கு வழங்கிய வேளையில், ஒக்கி புயலால், கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில்  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்திய அரசு உதவவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.