2017-12-13 15:56:00

குவாதலூப்பே அன்னை மரியா திருநாளில் திருத்தந்தையின் மறையுரை


டிச.13,2017. 'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது" என்ற மரியாவின் பாடலும், "ஆண்டவரைப் போற்றுவோம்" என்ற செக்கரியாவின் பாடலும் உலகெங்கும் வாழும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் பாடல்களாக அமைந்துள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் மாலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

டிசம்பர் 12, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட குவாதலூப்பே அன்னை மரியாவின் திருநாளையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில், மாலை 6 மணிக்கு திருப்பலியை தலைமையேற்று நிகழ்த்திய திருத்தந்தை, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

செக்கரியாவின் பாடலை, உண்மையிலேயே குழந்தை பேறு அடைந்திருந்த எலிசபெத்தின் பாடலாகவும் நாம் கருதலாம் என்று தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, கருவுற இயலாதவர் என்றழைக்கப்பட்ட எலிசபெத்தையும், குழந்தைப்பேறு அடைந்த எலிசபெத்தையும் இணைத்துப் பேசினார்.

கருவுற இயலாத தன்மை, இவ்வுலகில், பல பெயர்களில், பல வடிவங்களில், நிலவி வருகிறது என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, பொருளாதாரம், சமுதாயம், பாலினப் பாகுபாடு, இனம், மொழி என்ற பல நிலைகளில், ஒருவரது சக்தி முடக்கப்பட்டிருப்பதை எடுத்துரைத்தார்.

கருவுற இயலாதவர் என்றழைக்கப்பட்ட எலிசபெத்து, மரியாவை, இறைவனின் தாய் என்று, முதல் முதல் அடையாளம் கண்டதைப்போல், பூர்வீகக் குடியைச் சேர்ந்த யுவான் தியேகோ, தன் சமுதாய நிலையை மனதில் கொண்டு, தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை குவாதலூப்பே மரியாவிடம் எடுத்துரைத்தாலும், அவர் வழியே, அன்னை மரியா, பிறருக்கு அறிமுகமானார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

பல வழிகளிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ள இலத்தீன் அமெரிக்க மக்கள், எலிசபெத்து, புனித யுவான் தியேகோ ஆகியோரைப்போல, நம்பிக்கையை வழங்கும் கருவிகளாக மாற அழைக்கப்பட்டுள்ளனர் என்று, திருத்தந்தை, தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.