2017-12-13 15:53:00

பசுமை வர்த்தகமே இவ்வுலகிற்கு வளம் தரும்


டிச.13,2017. பசுமைப் பொருளாதாரத்தில் முதலீடு செய்யாதவர்கள், சாம்பல் நிற எதிர்காலத்தைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.

பிரெஞ்சு அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன், உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் ஆகியோர் முன்னிலையில், டிசம்பர் 12, இச்செவ்வாயன்று, ஒரே பூமிக்கோள உச்சி மாநாட்டை, பாரிஸ் மாநகரில் துவக்கி வைத்துப் பேசிய கூட்டேரஸ் அவர்கள், பசுமை வர்த்தகமே இவ்வுலகிற்கு வளம் தரும் வர்த்தகம் என்று எடுத்துரைத்தார்.

2015ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி, பாரிஸ் மாநகரில் நடைபெற்ற COP21 என்ற கூட்டத்தில் உருவான பாரிஸ் ஒப்பந்தத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவுறுவதையடுத்து இந்தக் கூட்டம் நடைபெறுகிறது என்று, கூட்டேரஸ் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

நிலத்தடி எரிசக்திகளை, நாம் இன்னும் அதிக அளவு சார்ந்திருப்பதும், அவற்றை மிக அதிக அளவில் பயன்படுத்தி வருவதும் நம் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்தாக முடியும் என்று கூட்டேரஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.

கற்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள், கற்கள் தீர்ந்துபோவதற்கு முன்னரே, அவற்றின் பயன்பாட்டை விட்டு வெளியேறினர் என்பதைச் சுட்டிக்காட்டிய ஐ.நா. பொதுச்செயலர், கூட்டேரஸ் அவர்கள், நிலத்தடி எரிபொருள் முழுமையும் தீர்ந்துபோகும் வரை நாம் காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.