2017-12-13 15:56:00

பாசமுள்ளப் பார்வையில்:தாய்க்குக் கடன்பட்டோர்,தாயாக மாறட்டும்


அந்த சிறிய நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கென நேர்முகத் தேர்வுக்கு அவன் சென்றிருந்தான். கல்லூரியில் முதல் மதிப்பெண் வாங்கியிருந்த அவனிடம் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் தயக்கமின்றி பதில் சொன்னான் அவன். இறுதியாக அவனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உன் தந்தை என்ன வேலை செய்கிறார், என்று. ‘எனக்கு ஒரு வயதாக இருக்கும்போதே என் தந்தை இறந்து விட்டார். என் தாய்தான் என்னைச் சிரமப்பட்டு படிக்க வைத்தார் என்று இவன் பதில் கூறினான். உன் தாய் என்ன வேலை செய்கிறார் என கேட்கப்பட்டது. என் தாய், சலவைத் தொழில் செய்கிறார். எல்லா நேரமும் துணிகளைத் துவைப்பதிலும், அவைகளை இஸ்திரி போட்டு தேய்ப்பதிலும் செலவிட்டு, என்னைப் படிக்க வைத்தார். நான் எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறி, அவருக்கு உதவி செய்ய என்னை அனுமதிப்பதில்லை’ என்றார் மகன். நேர்முகத் தேர்வாளர் கூறினார், 'இன்று மாலை நீ உன் தாயின் கைகளைப் பிடித்து சுத்தமாக தண்ணீரில் கழுவிவிட்டு, நாளை இங்கு வந்து என்னைப் பார்' என்று. மகனும் நம்பிக்கையிழந்தவனாக, வீட்டிற்குச் சென்று, துணி துவைத்துக் கொண்டிருந்த தாயின் கைகளைப் பிடித்து கழுவத் துவங்கினான். அப்போதுதான் தெரிந்தது, தன் தாயின் கைகள் குளிர்ந்த நீரில் பட்டு எவ்வளவு சொர சொரப்பாகவும், வெடித்துப்போயும் உள்ளன என்று. உடனே தன் உடைகளை மாற்றிவிட்டு, தாய்க்குத் துணையாக, துணிகளை துவைக்கத் துவங்கினான். தாய்க்கு மனதிற்குள் மகிழ்வாக இருந்தது. இரவு முழுவதும் மகனால் தூங்க முடியவில்லை. தன்னைப் படிக்க வைக்க தாய் இவ்வளவு தூரம் தன்னை வருத்திக் கொண்டார்களா? என்பதை எண்ணிப் பார்த்தபோது, கண்களில் நீர் கொட்டியது.  மறுநாள் அவன் மீண்டும் நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது, இரவு முழுவதும் தூங்காத அவன் கண்கள் சிவந்திருந்தன. நேர்முகத் தேர்வாளர் அவனிடம், ‘உன்னைப் பார்த்ததுமே உன்னுள் எழுந்துள்ள மாற்றம் புரிகிறது. மற்றவரின் துன்பத்தை புரிந்துகொண்டு அவர்களுக்காக அழுபவரால்தான், தன் உடன் உழைப்பாளர்களை நன்முறையில் நடத்த முடியும். உன் தாயின் பெருமையை இப்போதுதான் முற்றிலுமாக உணர்ந்துள்ளாய். உன் தாயிடமிருந்து கற்றவைகளை இந்த நிறுவனத்திற்காகப் பயன்படுத்து. இன்றே உன்னை இந்த நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கிறோம்' என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.