2017-12-13 16:14:00

லாஸ் ஆஞ்செலஸ் நகரில், குவாதலூப்பே மரியா திருநாள்


டிச.13,2017. கலிபோர்னியா மாநிலத்தின் பல பகுதிகளில் பரவியுள்ள காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட அனைவரையும், குவாதலூப்பே அன்னை மரியா அரவணைத்து, ஆறுதலும், பாதுகாப்பும் வழங்கவேண்டுமென்று அமெரிக்க ஐக்கிய நாட்டு பேராயர் ஒருவர் மறையுரை வழங்கினார்.

டிசம்பர் 12, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட குவாதலூப்பே அன்னை மரியா திருநாளையொட்டி, லாஸ் ஆஞ்செலஸ் நகரில் உள்ள வானகத் தூதர்கள் பேராலயத்தில், நள்ளிரவுத் திருப்பலியாற்றிய பேராயர் ஹோஸே கோமஸ் அவர்கள், அன்னையின் பாதுகாப்பில், அனைத்துலக சமுதாயத்தை ஒப்படைத்தார்.

மெக்சிகோ நாட்டின் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நடனங்கள், பாடல்கள் ஆகியவை, இந்தச் சிறப்புத் திருப்பலியில் இடம்பெற்றன என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியது.

மேலும், புனித யுவான் தியேகோவின் கரங்களில், அன்னை மரியாவின் உருவம் பதிக்கப்பட்டிருந்த அற்புதத் துணியின் ஒரு சிறு பகுதி, லாஸ் ஆஞ்செலஸ் பேராலயத்தில் பாதுகாக்கப்படுகிறது என்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டில், குவாதலூப்பே அன்னை மரியாவின் புனிதப்பொருள் இது ஒன்றே என்றும் CNA செய்தி கூறியுள்ளது.

 ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.