2017-12-14 15:34:00

திருத்தந்தை: படைப்பின் மீது இறைவன் காட்டும் மென்மை


டிச.14,2017. இறைவனின் மென்மையான குணம் அனைத்து படைப்புக்கள் மீதும் பரவியுள்ளது என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையின் கருப்பொருளாக அமைந்தது.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தின் ஆரம்ப சொற்களான, "அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்" என்பதை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், தன் மறையுரையை வழங்கினார்.

இறைவாக்கினர் எசாயாவின் சொற்களைக் கேட்கும்போது, நம் கடவுள் தாலாட்டுப் பாடுவதைப்போல் ஒலிக்கிறது என்று கூறியத் திருத்தந்தை, தாயாக, தந்தையாக விளங்கும் இறைவன், தாலாட்டுப் பாடுவதிலும் சிறந்தவர் என்று எடுத்துரைத்தார்.

அனைத்தும் வல்ல இறைவன், மிகச் சிறிய குழந்தையாக மாறினார் என்பதை, கிறிஸ்மஸ் காலம் நமக்கு நினைவுறுத்துகிறது என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறியவை, மென்மை இவற்றில் கடவுள் காட்டும் ஆர்வம், அவரது அளவற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.