2017-12-14 15:25:00

பாசமுள்ள பார்வையில்.. வழிபாட்டின் பொருளை உணர்த்திய தாய்


ஒரு சமயம், முகாலயப் பேரரசர் அக்பர் அவர்கள், காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அன்று மாலையானதும், தனது மத வழக்கப்படி, பாய் விரித்து, முழந்தாளிட்டு தொழுது கொண்டிருந்தார். அந்நேரத்தில், விவசாயப் பெண் ஒருவர், காலையில் வேலைக்குச் சென்ற தன் கணவர் மாலையில் வீடு திரும்பாததால், மிகுந்த கலக்கத்தோடு தேடிச் சென்றார். அப்பெண் சென்ற பாதையில், பேரரசர் தொழுகையில் ஈடுபட்டிருந்தார். அதைக் கவனிக்காமல், தடுக்கி விழுந்து, ஒரு வார்த்தைகூட மன்னிப்பும் கேளாமல், காட்டுக்குச் சென்றார் அப்பெண். இந்தத் தடங்கலால் பேரரசர் கோபம் கொண்டார். ஆனாலும் தொழுகையின்போது பேசக் கூடாது என்பதால் பேசாதிருந்தார் பேரரசர். அந்தப் பெண் மீண்டும் அப்பாதை வழியாக, தன் கணவருடன் மகிழ்ச்சியாகத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அப்பெண் பேரரசரைக் கவனித்தார். பேரரசரின் கோபம் தலைக்கேறியது. பெண்ணே, மரியாதைக் குறைவாக நடக்கக் காரணம் என்னவெனச் சொல்லாவிடில், தண்டிக்கப்படுவாய் என்றார். அப்பெண்ணோ எவ்வித பயமுமின்றி, பேரரசரைப் பார்த்து, என் கணவரைத் தேடிச் சென்ற பதட்டத்தில் நான் தங்களைக் கவனிக்கவே இல்லை. நீர் சொல்வதுபோல், தங்களை இடறி தடுக்கி விழுந்ததுகூட எனக்கு நினைவில்லை. நீரோ, அனைவரிலும் மேலான கடவுளிடம் வழிபாடு செய்தபோது என்னைக் கவனித்தது எப்படி? என்று கேட்டார். இதைக் கேட்டு பேரரசர் அக்பர் வெட்கமடைந்தார். இந்தப் பெண் ஓர் அறிவாளிகூட கிடையாது. சாதாரணப் பெண். அப்படியிருக்க, இவர் வழிபாட்டின் பொருளை, எவ்வளவு அழகாக விளக்கிவிட்டார் என்று மனதுக்குள் நினைத்தார். உண்மைதான். உள்ளம் ஒன்றாத வழிபாடு, வழிபாடு ஆகுமா! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.