2017-12-15 14:31:00

கிறிஸ்மஸ் குடிலின் கனிவுச் செய்தி அறிவிக்கப்பட வேண்டும்


டிச.15,2017. "கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சி" குழுவின் கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் 180 பேரை, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,   காங்கோ சனநாயக குடியரசின் சிறாருக்கும், அர்ஜென்டீனா நாட்டு இளையோருக்கும் உதவும் திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதற்கென, வத்திக்கானில், கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளதற்கு, தனது நன்றியைத் தெரிவித்தார்.

மிகவும் கடினமான இதயங்கள் இளகிடவும், அயலவர் மீதுள்ள புறக்கணிப்புத் தடைகளை அகற்றவும், அடுத்தவர்க்கு தங்கள் இதயங்களைத் திறப்பதற்கு ஊக்கப்படுத்தவும், இலவசமாக நன்கொடைகள் வழங்கவும் கிறிஸ்மஸ் பெருவிழா நம்மைத் தூண்டுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

இதனாலேயே, கிறிஸ்மஸின் அமைதி மற்றும் உடன்பிறப்பு உணர்வுள்ள செய்தியை, இக்காலத்திலும் வலியுறுத்த வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்றும், நம்மை வழிநடத்தும் உண்மையான உணர்வுகளால் இச்செய்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்மஸின் உண்மையான பொருளை, நாம் உணர்ந்துகொள்வதற்கு, கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சி உதவுகின்றது என்று கூறியத் திருத்தந்தை, பெத்லகேம் குடிலின் கனிவும், அமைதியும் நிறைந்த செய்தியை விதைப்பதற்கு, இந்நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இக்காலத்தில் கனிவு என்ற சொல் பெரும்பாலும் மறக்கப்பட்டு, வன்முறை, போர் ஆகிய சொற்களே பேசப்படுகின்றன என்றும், பெத்லகேம் குடில் வெளிப்படுத்தும் கனிவு, அமைதி, வரவேற்பு ஆகியவற்றை நாம் விதைப்போம் என்றும் கூறியத் திருத்தந்தை, தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.