2017-12-15 14:26:00

திருத்தந்தை, பொலிவியா அரசுத்தலைவர் Evo சந்திப்பு


டிச.15,2017. பொலிவியா நாட்டு அரசுத்தலைவர் Juan Evo Morales Ayma அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் 28 நிமிடங்கள் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

நட்புறவு சூழலில் நடந்த இச்சந்திப்பில், டிசம்பர் 17, வருகிற ஞாயிறன்று 81 வயதை நிறைவு செய்யும் திருத்தந்தைக்கு, அரசுத்தலைவர் Evo அவர்கள் வாழ்த்துச் சொன்னார். திருத்தந்தையும், செபமாலை மற்றும் நினைவுப் பதக்கங்களை, அரசுத்தலைவருக்குக் கொடுத்தார். அரசுத்தலைவர் Evo அவர்கள், வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்திருப்பது இது மூன்றாவது முறையாகும். 2015ம் ஆண்டில் பொலிவியாவிலும் திருத்தந்தையைச் சந்தித்துள்ளார் அரசுத்தலைவர் Evo.

திருத்தந்தையை தனியே சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார், பொலிவியா அரசுத்தலைவர் Evo.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், தலத்திருஅவை, நாட்டின் நலவாழ்வுக்கும், கல்விக்கும், பொதுநலனுக்கும் ஆற்றிவரும் நற்பணிகள், இன்னும், இருதரப்புக்கும் பொதுவான சில விவகாரங்கள் ஆகியவை, இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.   

2006ம் ஆண்டு சனவரி 22ம் தேதியன்று பதவியேற்ற Evo அவர்கள், பொலிவியா நாட்டின் பூர்வீக இனத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசுத்தலைவராவார். இவர், வறுமை, பொலிவியாவில் அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தலையீடுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார் என்று சொல்லப்படுகின்றது.  

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக இவாஞ்சலிக்கல் கூட்டமைப்பின் நான்கு பிரிதிநிதிகளை, இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து, சமய சுதந்திரம் பற்றி கலந்துரையாடினார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

WEA எனப்படும் உலக இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பில், 129 நாடுகளிலிலிருந்து அறுபது கோடிக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.