2017-12-16 16:53:00

கத்தோலிக்க நடவடிக்கை சிறார் குழுவைப் பாராட்டிய திருத்தந்தை


டிச.16,2017. கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்களைத் தெரிவிக்க, இச்சனிக்கிழமை காலை திருப்பீடம் வந்திருந்த கத்தோலிக்க நடவடிக்கை சிறார் குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்குழுவினர் ஏழைகளிடையிலும், வாழ்வில் ஒதுக்கப்பட்டோரிடையிலும் ஆற்றிவரும் பணிகளுக்கு தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

Catholic Action, அதாவது, கத்தோலிக்க நடவடிக்கை என்ற இவ்வமைப்பு உருவாக்கப்பட்டதன் 150ம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதால், இவ்வாண்டு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பின் மூத்த, வயது முதிர்ந்த உறுப்பினர்களுக்கும், இளையோருக்கும் இடையே நிலவும் நல்லுறவுகளை தான் பாராட்டும் அதேவேளை, முதியோரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை அதிகம் உள்ளன என்பதை எடுத்துரைத்தார்.

கடவுள் அன்பே உருவானவர் என்பதை மனதில் கொண்டவர்களாக, இயேசுவின் வாழ்க்கைப் பாதையில் ஒவ்வோர் இளையவரும் நடைபோட வேண்டியது அவசியம் என்பதையும் திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

இன்றைய உலகில் வாழும் அனைத்து வறியோரும் குழந்தை இயேசுவின் முகங்களாக உள்ளனர், ஏனெனில், குழந்தை இயேசுவும் பெத்லகேமில், பிறப்பதற்கு இடமின்றி அலைய வேண்டியதாயிற்று என்று கூறியத் திருத்தந்தை, துன்புற்று, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை, ஒவ்வொரு வறியோரின் முகத்திலும் காண முயல்வோம் என்று, தன்னைச் சந்திக்க வந்திருந்த சிறாரிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.