2017-12-16 16:48:00

புனிதப் பொருள்கள் குறித்து புனிதர் பட்ட பேராயத்தின் அறிக்கை


டிச.16,2017. அருளாளராகவும், புனிதராகவும், திருஅவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அறிவிக்கப்பட்டோரின் புனிதப் பொருள்கள், மற்றும் உடல்கள், பொதுமக்களின் வணக்கத்திற்கென வைக்கப்படுவது குறித்து, புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயம், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

புனிதப் பொருள்களின் உண்மைத்தன்மை குறித்த திருஅவை அதிகாரிகளின் அங்கீகாரம் அவசியம் என்பதை வலியுறுத்தும் இப்பேராயம், இத்தகையச் சான்றிதழ் இன்றி, எந்த ஒரு புனிதப் பொருளையும் மக்களின் வணக்கத்திற்கு வைக்கக் கூடாது என்று அறிவித்துள்ளது.

மறைமாவட்ட ஆயர்கள், ஏனைய உயர் அதிகாரிகள், புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயம் ஆகியவற்றின் அனுமதி தேவை என்பதை வலியுறுத்தும் இவ்வறிக்கை, புனிதப் பொருள்கள் தகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, மக்களின் வணக்கத்திற்கு உதவுவதோடு, மூடநம்பிக்கைகள் பரவுவதை தடை செய்வதாகவும் இருக்கவேண்டும் என்று கூறுகிறது.

அருளாளர் அல்லது புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளின் ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, இறை ஊழியரின் புனிதப் பொருள்களோ, உடலோ, புனிதர்களின் புனிதப் பொருள்களுக்கு வழங்கப்படும் நிலைக்கு உயர்த்தி வைக்கக்கூடாது என்றும், இப்பேராயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருவர் அருளாளராகவோ, புனிதராகவோ அறிவிக்கப்படும்வரை, அவரது உடல் மற்றும் புனிதப் பொருள்கள், மக்களின் வணக்கத்தைப் பெறுவதற்கென, ஆலயத்தில் வைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று, இப்பேராயம் தன் அறிக்கையில் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.