2017-12-18 16:41:00

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் - திருத்தந்தை அருகாமை


டிச.18,2017. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் இத்தாலியில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Ischia தீவுப் பகுதிகளின் இன்றைய நிலைகள் குறித்து ஆய்வுசெய்யவும், அம்மக்களுக்கு ஆறுதலை வழங்கவும், தன் பிரதிநிதியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி இடம்பெற்ற நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தலத்திருஅவை வழியாக உதவிகளை வழங்கியுள்ளபோதிலும், 4 மாதங்களுக்குப்பின் அங்குள்ள நிலைகளை நேரடியாக கண்டு ஆறுதல் வழங்க,  திருத்தந்தையின் பிறரன்பு பணி அமைப்பிற்குப் பொறுப்பாளராகப் பணியாற்றும் பேராயர் Konrad Krajewski அவர்களை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுள் பலர் இன்னும் விடுதிகளிலேயே தங்கி வரும் நிலையில், திருத்தந்தையின் பிரதிநிதியாக வருகை தந்த பேராயர் Krajewski அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுள் 2500 பேரை, சந்தித்து உரையாடியது, திருத்தந்தை இம்மக்கள் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார் Ischia ஆயர் Pietro Lagnese.

நில நடுக்கத்தின் பாதிப்புக்கள் தெரிய வந்தவுடனேயே, பாதிக்கப்பட்ட மக்களுக்காக செபிக்கும்படி அழைப்பு விடுத்து, தன் ஒருமைப்பாட்டை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டதை சுட்டிக்காட்டிய ஆயர் Lagnese அவர்கள், இந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழாவில், இம்மக்களோடு நெருக்கமாக இருக்க, தலத்திருஅவை ஆவல் கொள்கின்றது என்றார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் 21ம் தேதி  Ischia தீவில் இடம்பெற்ற நில நடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்தனர், எண்ணற்ற கட்டடங்கள் இடிந்து, ஆயிரக்கணக்கானோர் உறைவிடங்களை இழந்தனர்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.