2017-12-18 16:48:00

நைஜீரியாவில் கடத்தப்பட்ட அருள்சகோதரிகளின் விடுதலைக்கு செபம்


டிச.18,2017. ஒரு மாதத்திற்கு முன்னால், நைஜீரியாவில் கடத்திச் செல்லப்பட்ட ஆறு அருள்சகோதரிகளுக்காக அனைவரும் செபிக்க வேண்டும் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நைஜீரியாவின் Iguoriakhi எனுமிடத்திலுள்ள தங்கள் துறவு இல்லத்திலிருந்து கடத்திச்செல்லப்பட்ட, கிறிஸ்துவின் திருநற்கருணை இதய சபையின் (Eucharistic Heart of Christ) ஆறு அருள் சகோதரிகள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாத நிலையில், அவர்களின் விடுதலைக்காக அனைவரும் செபிக்க வேண்டும் என அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவர்களும், இவர்களைப்போல் கடத்தப்பட்டு,  துன்பச் சூழலில் வைக்கப்பட்டுள்ளோரும், இந்த கிறிஸ்து பிறப்புக் காலத்தில் தங்கள் துறவு குழுமத்துடன் வாழ்வதற்கு, நம் செபங்கள் வழியாக உதவுவோம் என கூறினார். நைஜீரிய ஆயர்களுடன் இணைந்து, தான் இந்த அழைப்பை விடுப்பதாக ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை.

இவ்வாண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி, ஆயுதம் தாங்கிய  குழு ஒன்று நைஜீரியாவின்  Iguoriakhi எனுமிடத்திலுள்ள பெண் துறவு இல்லத்திற்குள் நுழைந்து, அங்குள்ள பொருட்களைத் திருடியதுடன், அங்கிருந்த மூன்று அருள்சகோதரிகளையும், துறவு வாழ்வுக்கு தயாரித்துக் கொன்டிருந்த மூன்று பெண்களையும் படகில் கடத்திச் சென்றுள்ளனர்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.