2017-12-18 16:40:00

மகிழ்வும்,செபமும்,நன்றியுரையும், திருவருகைக்கால அடையாளங்கள்


டிச.18,2017. உறுதியான மகிழ்வு, செபத்தில் நிலைத்திருத்தல், தொடர்ந்து நன்றியுரைத்தல் போன்றவை, இந்த திருவருகைக்காலத்தின் அடையாளங்களாக இருக்கவேண்டும் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவருகைக் காலத்தின் இந்த மூன்றாம் ஞாயிறு, 'மகிழுங்கள் ஞாயிறு' என கொண்டாடப்படுவதைப்பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்வாயிருத்தல், செபித்தல், நன்றியுரைத்தல் ஆகியவைகளின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

நாம் எதிர்பார்த்தவண்ணம் எதுவும் நடக்காமல் ஏமாற்றம் மிஞ்சும்போதுகூட, நாம் மகிழ்ச்சியுடன் செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் நாம் தனியாக இல்லை, நம்முடன் இறைவனால் அனுப்பப்பட்ட இயேசு உள்ளார் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகளுக்கு நற்செய்தியை வழங்கவும், நம் காயங்களுக்கு மருந்திடவும், அடிமைகளுக்கு விடுதலை வழங்கவும், கைதிகளை விடுவிக்கவும், அருளின் ஆண்டை அறிவிக்கவும் அவர் அனுப்பப்பட்டுள்ளார் என்று கூறினார்.

இயேசுவில் நாம் ஆழமாக வேரூன்றியிருக்கும்போது, நம் உள்மன அமைதியைப் பெறுவதுடன், மகிழ்வில் வாழ வழிபிறக்கின்றது என்ற கருத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவை சந்தித்த எவரும், மகிழ்ச்சியை முன்னறிவிக்கும் சான்றுகளாக, செயல்படுவது உறுதி என்றார்.

தாராளமனதுடனும், தன்னுடைய இரக்கம் மிகு அன்புடனும் பொறுமையுடனும், நன்மைத்தனத்துடனும் நம்முடன் செயல்படும் இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்வது முக்கியம் என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இந்த திருவருகைக்காலத்தில் மகிழ்வுடனும், செபத்துடனும், நன்றியுணர்வுடனும் செயல்படுவது, கிறிஸ்து பிறப்பு விழாவை சிறந்த முறையில் கொண்டாட நமக்கு உதவும் என்பதையும், தன் மூவேளை செப உரையில், மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.