2017-12-19 16:30:00

எருசலேமை ஒரு சிலருக்கு மட்டும் என முடக்க முடியாது


டிச.19,2017. கலந்துரையாடல்கள் மற்றும் அனைத்துலக சட்டத்தின் அடிப்படையில், நீதியுடன் கூடிய அமைதி உடன்பாடு ஒன்று ஏற்படும் வரையில், எருசலேம் புனித நகர், பொதுவான ஒரு நகரம் என்ற நிலை கடைபிடிக்கப்பட வேண்டும் என, தங்கள் கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளனர் அப்பகுதி கிறிஸ்தவத் தலைவர்கள்.

எருசலேமின் கிரேக்க, அர்மேனிய, காப்டிக், சிரிய மற்றும், எத்தியோப்பிய, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளும், இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க திரு அவையும், கிரேக்க மெல்கிதே, மாரோனைட், அர்மீனியன் மற்றும் சிரியன் கத்தோலிக்க அவைகள், எப்பிஸ்கோப்பல் கிறிஸ்தவ அவை, எவாஞ்சலிக்கல் லூத்தரன் அவை ஆகியவையும் இணந்து கையெழுத்திட்டுள்ள இச்செய்தியில், எருசலேம் நகரை ஒரு சிலருக்கு என மட்டும் முடக்கிப்போட முயல்வது, ஓர் இருண்ட காலத்திற்கே வழிவகுக்கும் என கூறியுள்ளனர்.

அன்று இயேசு பிறந்த காலத்தில் இருந்ததுபோல், தற்போதும், பல்வேறு சவால்களை புனித பூமி எதிர்கொண்டு வருவதால், மகிழ்வையும், நம்பிக்கையையும், அமைதியையும் கொணரும் வானதூதர்களின் அறிவிப்புக்காக, அக்கால இடையர்களைப்போல் நாம் காத்திருக்கிறோம் என, மேலும் தங்கள் செய்தியில் கூறியுள்ளனர், எருசலேம் கிறிஸ்தவத் தலைவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.