2017-12-19 13:14:00

பெரு நாட்டின் பதட்ட நிலைகள் குறித்து ஆயர்களின் கவலை


டிச.19,2017. இலஞ்ச ஊழல் புகாரில் சிக்கியுள்ள பெரு அரசுத்தலைவர், பதவி விலகவேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் கேட்பதைத் தொடர்ந்து எழுந்துள்ள பதட்ட நிலைகள் குறித்து, ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து, அந்நாட்டு ஆயர்கள், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய கட்டட நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, பெரு அரசுத்தலைவர் Pedro Pablo Kuczynski அவர்கள் இலஞ்சம் பெற்றார் என்று, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பெரு ஆயர்கள், தற்போதைய பதட்ட நிலைகள் குறித்தும், அரசு நிர்வாகம் முடக்கப்பட்டுள்ளது மற்றும் இலஞ்சம் குறித்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இன்றைய குடியரசுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் அரசியல் இலஞ்ச ஊழல்கள், அனைத்து அமைப்பு முறைகளையும் குறைவாக மதிப்பிடுபவைகளாக உள்ளன என்று, ஆயர்கள், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

பொதுநலனை மனதில் கொண்டு, பெரு நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், கலந்துரையாடல்களுக்கு முன்வரவேண்டும் என்ற அழைப்பையும், பெரு ஆயர்கள், தங்கள் அறிக்கையில் முன்வைத்துள்ளனர்.

வருகிற சனவரி மாதம் 15ம் தேதி முதல், 22ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலே மற்றும் பெரு நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.