சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

அமேசான் பகுதி பழங்குடியினரைச் சந்திக்கவிருக்கும் திருத்தந்தை

அமேசான் பகுதியின் பழங்குடி மக்கள் - RV

20/12/2017 16:34

டிச.20,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரு நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின்போது, Puerto Maldonado எனுமிடத்தில் பழங்குடியினரைச் சந்திக்கும் அந்த மாநாடு, உலகின் கவனத்தை ஈர்க்கும் என்று, பெரு நாட்டு துறவு சபைத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

வருகிற சனவரி 18ம் தேதி முதல் 21ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெரு நாட்டில் பயணம் மேற்கொள்ளும் வேளையில், அமேசான் பகுதியின் பழங்குடி மக்களைச் சந்திக்கும்போது, அந்தச் சந்திப்பு, இதுவரை உலகின் பல நகரங்களில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாடுகளை விட வேறுபட்டிருக்கும் என்று இஸ்பானிய மறைபரப்புப்பணி துறவு சபையின் உலகத் தலைவர், அருள்பணி José María Rojo அவர்கள் "La República" என்ற நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஏனைய உலக உச்சி மாநாடுகளில், அரசுத் தலைவர்களும், சக்தி மிக்கவர்களும் பங்கேற்று வந்துள்ளனர், ஆனால், பெரு நாட்டில் திருத்தந்தையுடன் சந்திப்பை மேற்கொள்வோர், மிக எளிய மக்கள் என்று, அருள்பணி Rojo அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அமேசான் பழங்குடியினரை திருத்தந்தை சந்திக்கும் தருணத்தில், இம்மக்களின் ஆழ்ந்த ஆசைகளை, கவலைகளை திருத்தந்தை நேரில் உணர இது சிறந்ததொரு வாய்ப்பாக இருக்கும் என்று, Puerto Maldonado வின் ஆயர், David Martínez de Aguirre அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

20/12/2017 16:34