2017-12-20 14:50:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 5


டிச.20,2017. “இதோ பேசுகின்ற இயேசுவின் திருத்தூதர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?” என, எருசலேமில் விழாவுக்கு வந்திருந்த மக்கள் கூட்டத்தினர் வியந்தனர். பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும்... ஆகிய நாம், நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே! என்றனர். திருத்தூதர் பணிகள் நூலில், பெந்தக்கோஸ்து என்னும் நாள் பற்றிய பகுதியில் இவ்வாறு வாசிக்கிறோம். கி.பி.65ம் ஆண்டுக்குப் பின்னர் எழுதப்பட்ட புனித பேதுருவின் முதல் திருமுகத்தில், புனித பேதுரு போந்து, கலாத்தியா, கப்பதோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டு வாழ்கின்ற கிறிஸ்தவர்களை வாழ்த்தி, மடலை ஆரம்பிக்கின்றார். எனவே தற்போதைய துருக்கி நாட்டின், கப்பதோக்கியாவில் கிறிஸ்தவம் தொடக்க காலத்திலேயே பரவியிருந்துள்ளது. மூன்றாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில், எருசலேம் நகர் அலெக்சாந்தர், கப்பதோக்கிய மாநிலத்தின் முதல் ஆயராகப் பணியாற்றியுள்ளார். உரோமைப் பேரரசின் உள்ளூர் அதிகாரிகளால் கிறிஸ்தவர்கள் கடும் அடக்குமுறைகளை அனுபவித்த காலம் அது. எனினும், மூன்றாம் நூற்றாண்டில், சிறிய கிறிஸ்தவ சமூகம், அங்கே இருந்து வந்துள்ளது. கி.பி.250ம் ஆண்டில், கிரகரி Thaumaturgus என்பவர் ஆயராகப் பொறுப்பேற்றபோது, செசாரியாவில் திருஅவையில் 17 கிறிஸ்தவர்களே இருந்துள்ளனர்.

கி.பி. 325ம் ஆண்டில் நீசேயாவில் நடந்த பொதுச்சங்கத்தில், கப்பதோக்கிய ஆயர்களும் பங்கேற்றுள்ளனர். கிறிஸ்தவர்கள், பல இடங்களில் பரவியிருந்ததால், செசாரியா ஆயரை ஆதரிப்பதற்காக, உள்ளூர் ஆயர்கள் நியமிக்கப்பட்டனர். நான்காம் நூற்றாண்டின் கடைசி கட்டத்தில், ஏறத்தாழ ஐம்பது உள்ளூர் ஆயர்கள் இருந்தனர். நீசா நகர் ஆயரான புனித கிரகரி காலத்தில், கப்பதோக்கிய கிறிஸ்தவர்கள் மிகவும் பக்தியுள்ளவர்களாக இருந்தனர். கப்பதோக்கியாவில், செபஸ்தே நகரின் நாற்பது மறைசாட்சிகள் பக்தி பரவியிருந்தது. இத்தகைய சூழலில், கப்பதோக்கியாவின்  செசாரியாவில், கி.பி. 335ம் ஆண்டில் பிறந்தவர், நீசா நகர் புனித கிரகரி (St Gregory of Nyssa335 – 395). இவரது தந்தை பேசில், தாய் எமிலியா ஆகிய இருவருமே புனிதர்கள். இவர் தனது மூத்த சகோதரரான, புனித பெரிய பேசில், சகோதரி புனித மக்ரினா ஆகிய இருவரால் வளர்க்கப்பட்டார். கிரகரி படிப்பில் காட்டிய திறமை, இவரது ஒளிமயமான எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டியது. சிறந்த பேராசிரியராக விளங்கிய இவர், திருஅவையின் பணிகளிலும் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டார். திருமணமான பின்னர், அருள்பணியாளர் ஆவதற்காகப் படிக்கச் சென்றார். அருள்பணியாளராகவும் திருப்பொழிவு பெற்றார். அக்காலத்தில் அருள்பணியாளர்களுக்கு கன்னிமை வாழ்வு கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி.372ம் ஆண்டில் நீசா (Nyssa) நகர் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயத்தில், கிறிஸ்துவின் இறைத்தன்மையை மறுதலிக்கும் ஆரியனிசத் தப்பறைக் கொள்கை பரவி, திருஅவையில் பெரும் பதட்டநிலைகளை உருவாக்கியிருந்தது. புனித கிரகரி, திருஅவையின் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தினார் என்று, பொய்க் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். பின் விடுவிக்கப்பட்டு, மீண்டும் கி.பி.378ம் ஆண்டில் ஆயர் பணியைத் தொடர்ந்தார். மக்கள் மிகுந்த ஆனந்தத்துடன் ஆயரை வரவேற்றனர்.

தன் சகோதரரான புனித பெரிய பேசிலின் இறப்புக்குப் பின்னரே, நீசா ஆயரான புனித கிரகரி, உண்மையில், தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி செயலாற்றத் தொடங்கினார். ஆரியனிசத்திற்கு எதிராகவும், திருஅவை கோட்பாடுகள் குறித்து சந்தேகத்துடன் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும், மிகவும் காரசாரமாக எழுதினார். திருஅவையின் மரபுவழிப் போதனைகளையும், கோட்பாடுகளையும் பாதுகாப்பதில் ஆர்வமுடன் செயல்பட்டார். இதனால் திருஅவையின் பாரம்பரியக் கோட்பாடுகளைப் பாதுகாப்பவர் என்று போற்றப்பட்டார். ஆரியனிசத்திற்கு எதிராகப் போதிப்பதற்காக, பல இடங்களுக்கு அனுப்பப்பட்டார். முதலாம் கான்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கத்தில் மிக முக்கியமான அங்கம் வகித்தார் Nyssa நகர் புனித கிரகரி. அதிலிருந்தே இவரது புகழ் நிலைத்து நின்றது. திருஅவையின் பாரம்பரியக் கோட்பாடுகளைப் பாதுகாத்ததில், திருஅவையின் தூண் எனவும், கிறிஸ்தவ ஆன்மீகத்தில் ஆழ்நிலை தியான மரபுக்கும், ஆதீன துறவு வாழ்வுக்கும் அதிகளவில் உதவியவர்களில் ஒருவர் எனவும் இவர் போற்றப்படுகிறார். கி.பி.395ம் ஆண்டு இவர் இறந்தார். இவரின் விழா சனவரி 10ம் நாள் சிறப்பிக்கப்படுகின்றது. இயேசு மீது ஆழ்ந்த விசுவாசமும் பற்றும் கொண்டு வாழ்ந்த இந்தப் புனிதர், நம்மிலும் இதே விசுவாசம் வேரூன்ற உதவுகிறார். ஏழாவது பொதுச்சங்கம் இவரை, ‘திருஅவைத் தந்தையருள் தந்தை’ என்று அழைத்தது.   

நீசேயா பொதுச்சங்கத்தில் வரையறுக்கப்பட்ட விசுவாச அறிக்கையைக் காப்பாற்றியவர்களில், புனித பெரிய பேசில், அவரின் சகோதரரான, நீசா நகர் புனித கிரகரி, பேசிலின் ஆயுள்கால நண்பரான நாசியானுஸ் நகரின் புனித கிரகரி ஆகிய மூவரும் முக்கியமான திருஅவைத் தந்தையர்களாகக்  கருதப்படுகின்றனர். இவர்கள் மூன்று கப்பதோக்கியர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.