2017-12-20 15:55:00

"நீங்கள் என்ன கொடுக்கிறீர்கள் என்பதை விண்ணகம் போற்றும்"


டிச.20,2017. "நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதை அல்ல, மாறாக, நீங்கள் என்ன கொடுக்கிறீர்கள் என்பதையே விண்ணகம் போற்றி மதிக்கும்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக டிசம்பர் 20, இப்புதனன்று வெளியாயின.

@pontifex என்ற முகவரியுடன், ஒவ்வொரு நாளும், இத்தாலியம், பிரெஞ்சு, இஸ்பானியம், ஆங்கிலம், போர்த்துகீசியம், ஜெர்மானியம், இலத்தீன், போலந்து மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில், திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளியாகி வருகின்றன.

புதிய வழி நற்செய்தி அறிவிப்புப் பணியின் ஒரு வெளிப்பாடாக, 12-12-2012 என்ற தேதியில், அப்போது திருத்தந்தையாகப் பணியாற்றிய 16ம் பெனடிக்ட் அவர்களால், டுவிட்டர் செய்திகள் துவக்கப்பட்டன.

இவ்வாண்டு 12ம் தேதி, இம்முயற்சி, தன் 5 ஆண்டு நிறைவைக் கொண்டாடியபோது, “இன்று ஐந்தாண்டுகள் நிறைவைக் காணும் @Pontifex என்ற டுவிட்டர் செயலியைப் பார்வையிடுகின்றவர்களுக்கு நன்றி. சமூகத் தொடர்பு சாதனங்கள், மனிதாபிமானம் செறிந்த இடங்களாக, எப்பொழுதும் அமைவதாக!” என்ற சொற்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

நான்கு கோடிக்கும் மேற்பட்டோர், திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளையும், ஐம்பது இலட்சத்துக்கு அதிகமானோர் திருத்தந்தையின் இன்ஸ்டகிராம் பக்கத்தையும், பார்வையிடுகின்றார்கள் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.