2017-12-20 15:13:00

பாசமுள்ள பார்வையில்…..........., : காலம் கடந்து பிறந்த ஞானம்


வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, என்னென்னவோ நடந்திருப்பது தெரிகிறது. நல்லவற்றை நினைத்து இரசிக்க முடிகிறது. ஆனால், செய்யத் தவறியவற்றை இனிமேல் திருத்தி அமைக்க முடியுமா என மனது துடிக்கிறது.

எத்தனை முறை அம்மாவிடம் கோபப்பட்டிருக்கிறேன், அவர்கள் திரும்பி கோபப்பட்டதில்லை. அவர்களின் இயலாமையா, அல்லது, என்னால் அதனை தாங்க முடியாது என நினைத்ததாலா?

ஒருமுறை கூட என் தாயின் சமையலை நான் பாராட்டியதில்லை. அது அவர்களின் கடமை என நான் எண்ணியதாலா? அல்லது, நல்லதைப் பாராட்டும் குணத்தை நான் வளர்த்துக் கொள்ளாததாலா?

என் துணிகளைக் கூட துவைத்திராத நான், ஒரு நாளாவது என் தாயின் துணிகளை துவைத்து உதவியிருக்கலாம். அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது கூட, துணி துவைப்போரிடம் கொடுத்துதான் துவைக்கச் சொன்னேன்.

ஒரு நாள் கூட என் தாயுடன் பேசுவதற்கென நேரம் ஒதுக்கியதில்லை. தொலைக்காட்சியும், திரை அரங்கும் என் நேரத்தை உண்டு கழித்தன.

என் அலுவலக கோபத்தை தாயிடம் காட்டினேன். வேறு யாரிடம் காட்டுவது என நியாயம் வேறு கற்பித்தேன்.

இராமேஸ்வரம் கோவிலுக்கு போகவேண்டும் என்று ஒருமுறை தாய் கூறியபோது, 'எனக்கெங்கே விடுமுறை கிடைக்கும்' என பதில் சொன்னேன். பக்கத்து வீட்டு மாமியுடன் போய் வருகிறேன் என பயந்துகொண்டே அம்மா சொல்லியபோது, 'வீட்டுச் சமையலை யார் கவனிப்பது' என குதர்க்கம் பேசினேன்.

காலையில் ஒருநாள் நான் சீக்கிரமாக எழுந்து காப்பி போட்டு, அம்மாவை அசத்தியிருக்கலாம். அவள் பிறந்த நாள் அன்றாவது, ஒரு புடவை வாங்கிக் கொடுத்து, வெளியில் கூட்டிச் சென்றிருக்கலாம். ஒரு மாதமாவது என் முழு சம்பளத்தையும் தாயிடம் கொடுத்து, வீட்டுச் செலவுகளை கவனிக்கச் சொல்லியிருக்கலாம்.

'வா அம்மா, இன்று இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்' என்று கூப்பிட்டிருக்கலாம், குறைந்தபட்சம், 'நீ சாப்பிட்டாயா' என்றாவது கேட்டிருக்கலாம்.

அந்த தாய் நோயில் வீழ்ந்தபோது, கடன்பட்டாவது காப்பாற்றியிருக்கலாம்.

காலம் கடந்து ஞானம் பிறந்திருக்கிறது.

என் தாயின் புகைப்படத்திற்கு, தினம் தினம் மாலை இட்டு, மன்னிப்பு கேட்கிறேன்.

‘மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால், நீயே என் தாயாய் வந்து விடு,

நான் உன்னை கொண்டாட வேண்டும்......’ என மனமுருகிக் கேட்கிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.