2017-12-22 15:06:00

உயிரைக் காப்பதே கிறிஸ்தவர்களின் முதன்மையான கடமை


டிச.22,2017. கருவறையிலிருந்து வெளிச்சத்திற்கு வரத்துடிக்கும் மென்மையான உயிரை அழிப்பதற்கு எந்த மனிதருக்கும் உரிமை இல்லை என்றும், உயிரைக் காப்பதே கிறிஸ்தவர்களின் முதன்மையான கடமை என்றும் தென் கொரிய கர்தினால் ஒருவர் தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

"கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்" என்ற தலைப்பில், சோல் உயர் மறைமாவட்ட பேராயர், கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், வலுவற்ற உயிர்களைக் காப்பது என்பதை மையக்கருத்தாகக் கூறியுள்ளார்.

வட கொரியாவில் வாழும் மக்களுக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ள கர்தினால் Yeom Soo-jung அவர்கள், சமுதாயத்தின் விளிம்பில், ஒரு குழந்தையாகப் பிறந்த இயேசு, விளிம்பில் வாழ்வோர் மீது நாம் காட்டும் அக்கறையைக் குறித்து ஆய்வு செய்ய அழைக்கிறார் என்று கூறியுள்ளார்.

வாழ்வைக் காக்கும் முயற்சிகளை அனைத்து அரசுத்தலைவர்களும் மேற்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளுடன், கர்தினால் Yeom Soo-jung அவர்கள், தன் கிறிஸ்து பிறப்பு விழா செய்தியை நிறைவு செய்துள்ளார். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.