2017-12-22 15:38:00

நட்பு, ஒருமைப்பாடு, அமைதி ஆகியவற்றை உலகெங்கும் பரப்ப…


டிச.22,2017. அசிசி நகர் புனித பிரான்சிஸ் வழங்கியுள்ள எடுத்துக்காட்டின் உதவியுடன், நட்பு, ஒருமைப்பாடு, அமைதி ஆகியவற்றை உலகெங்கும் பரப்ப உங்களை வாழ்த்துகிறேன் என்ற சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பன்னாட்டு கருத்தரங்குகளுக்கு செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

பிரான்சிஸ்கன் துறவு சபையினரிடம், புனித பூமி ஒப்படைக்கப்பட்டதன் 800ம் ஆண்டு நிறைவு, இவ்வாண்டு முழுவதும் சிறப்பிக்கப்படுவதையடுத்து, டிசம்பர் 21, இவ்வியாழனன்று உரோம் நகரிலும், 22 இவ்வெள்ளியன்று அசிசி நகரிலும் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்குகளுக்கு திருத்தந்தை அனுப்பியிருந்த செய்தியில் இவ்வாறு கூறினார்.

"அமைதியை வளர்க்கும் வண்ணம், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கிடையே இடம்பெறும் உரையாடல்" என்ற மையக்கருத்து, இந்த கருத்தரங்கிற்கென தேர்ந்தெடுக்கபப்ட்டதற்கு, திருத்தந்தை தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அண்மைய நாட்களில், எருசலேம் நகரைச் சுற்றி உருவாகியுள்ள சங்கடம் நிறைந்த சூழல், உரையாடல், மற்றும் சந்திக்கும் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை நமக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்துகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி வலியுறுத்துகிறது.

உரோம் நகரின் அந்தோனியானும் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் இவ்வியாழனன்று நடைபெற்ற கருத்தரங்கில், "புனித பிரான்சிஸிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் வரை: ஒப்புரவான உலகின் இறைவாக்கு" என்ற கருத்தில், துவக்க உரை வழங்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.