2017-12-23 14:37:00

காஷ்மீரில் அமைதி நிலவ கத்தோலிக்கர் செபம்


டிச.23,2017. ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீரில், அமைதி நிலவ வேண்டுமென, கத்தோலிக்கர் இந்நாள்களில் உருக்கமாகச் செபித்து வருகின்றனர்.

2016ம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில், தலைநகர் ஸ்ரீநகரில் கொலைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, அந்நகரிலுள்ள 129 ஆண்டுகள் பழமையான திருக்குடும்ப ஆலயத்தில் கிறிஸ்மஸ் பெருவிழா சிறப்பிக்கப்படாமல் இருந்தவேளை, இந்த ஆண்டு கிறிஸ்மஸைக் கொண்டாடுவதற்கு, கத்தோலிக்கர் தயாரித்தும், செபித்தும் வருகின்றனர்.

அமைதிக்காகக் கத்தோலிக்கர் செபிப்பது குறித்து யூக்கா செய்தியிடம் பேசிய, திருக்குடும்ப ஆலய பங்குத்தந்தை ராய் மாத்யூ அவர்கள்,  ஜம்மு-காஷ்மீரில், போரிடும் தரப்புக்களுக்கிடையே கலந்துரையாடல்களை நடத்துவதற்கு மத்திய அரசு முயற்சித்துவரும்வேளை, தலத்திருஅவையும், அம்மாநிலத்தில் இரத்தம் சிந்துதல் நிறுத்தப்பட வேண்டுமென செபித்து வருகின்றது என்று கூறினார்.

இந்தியாவில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் மோதல்களில், இவ்வாண்டில் டிசம்பர் 10ம் தேதி வரை, குறைந்தது 343 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

ஒரு கோடியே 20 இலட்சம் மக்கள் வாழும் ஜம்மு-காஷ்மீரில், ஏறத்தாழ 33 ஆயிரம் பேர் கிறிஸ்தவர்கள். இவர்களில் பாதிப்பேர் கத்தோலிக்கர்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.