2017-12-23 11:22:00

கிறிஸ்து பிறப்பை மையப்படுத்தி, வரலாறு எழுதப்பட்டுள்ளது


டிச.22,2017. கிறிஸ்து பிறப்பை மையப்படுத்தி, மனித வரலாற்றை குறிக்க கி.மு. மற்றும் கி.பி. என்று பயன்படுத்தப்பட்ட குறியீடுகளை மாற்றி, இன்றைய உலகம் வேறு குறியீடுகளைப் பயன்படுத்தினாலும், கிறிஸ்துவின் பிறப்பை மையப்படுத்தி கணிக்கப்படும் கால அளவு, இன்னும் அப்படியே பழக்கத்தில் உள்ளது என்று, பாப்பிறை இல்லத்தின் மறையுரையாளராகப் பணியாற்றும் அருள்பணி Raniero Cantalamessa அவர்கள் மறையுரை வழங்கினார்.

திவருகைக்காலத்தையொட்டி, திருத்தந்தைக்கும், திருப்பீட அதிகாரிகளுக்கும் இவ்வெள்ளி காலை மறையுரை வழங்கிய அருள்பணி Cantalamessa அவர்கள், ‘காலமனைத்திலும் பிரசன்னமாய் இருப்பவர் கிறிஸ்து’ என்பதை, தன் மறையுரையின் மையக்கருத்தாக வழங்கினார்.

கிறிஸ்தவ மரபின்படி, காலம், துவக்கத்திலிருந்து அளக்கப்படுவதில்லை, மாறாக, கிறிஸ்து என்ற மையப்புள்ளியிலிருந்து, காலம், பின்னோக்கியும், முன்னோக்கியும் அளக்கப்படுவது, நாம் வாழும் காலத்தின் மையம் கிறிஸ்து என்பதை உணர்த்துகிறது என்று அருள்பணி Cantalamessa எடுத்துரைத்தார்.

கிறிஸ்து, வரலாற்று மனிதராகவும், அவரது பிறப்பு வரலாற்று நிகழ்வாகவும், அவரது தொடர்ந்த பிரசன்னம் அருள் அடையாளமாகவும் நம் மத்தியில் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்பணி Cantalamessa அவர்கள், கிறிஸ்துவின் பிரசன்னம் இறந்த காலம் அல்ல என்பதை தெளிவுபடுத்தவே, 'இன்று கிறிஸ்து பிறந்துள்ளார்' என்ற சொற்களை ஒவ்வொரு கிறிஸ்து பிறப்பு விழாவிலும் நாம் பயன்படுத்துகிறோம் என்று கூறினார்.

கிறிஸ்துவை வெறும் வரலாற்று நாயகனாக மட்டுமல்ல, நம்மோடு வாழும் இறைவனாக ஏற்றுக்கொள்வதே, நம் வாழ்வை மாற்றும் சக்தி பெற்றது என்பதை, அருள்பணி Cantalamessa அவர்கள் தன் திருவருகைக்கால மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.