2017-12-23 14:28:00

பிரதமர் ஹசீனா கிறிஸ்தவப் பிரதிநிதிகளுடன் கிறிஸ்மஸ் விழா


டிச.23,2017. புலம்பெயர்ந்த ரொங்கியா மக்களுக்கு, எல்லைகளைத் திறந்துவிட்டதன் வழியாக, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள், மனித சமுதாயத்தின் அன்னையாக மாறியுள்ளார் என்று, பங்களாதேஷ் கர்தினால் பாட்ரிக் டி’ரொசாரியோ அவர்கள் பாராட்டினார்.

பிரதமர் ஹசீனா அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் பெருவிழாக் கொண்டாட்டங்களில், இவ்வாறு பாராட்டிப் பேசிய, டாக்கா பேராயர், கர்தினால் டி’ரொசாரியோ அவர்கள், திருத்தந்தையின் பங்களாதேஷ் திருத்தூதுப் பயணத்தில், அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெறுவதற்கு அரசு ஆற்றிய அனைத்து உதவிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

அச்சமயத்தில் டாக்கா நகருக்கு வந்த அனைத்துக் கிறிஸ்தவர்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளுக்கும் நன்றி தெரிவித்தார், கர்தினால் டி’ரொசாரியோ.

ஏறத்தாழ எழுநூறு கிறிஸ்தவப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த கிறிஸ்மஸ் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹசீனா அவர்கள், ரொங்கியா விவகாரத்தில், பங்களாதேஷ் நாட்டிற்கு, உலகளாவிய சமுதாயம் ஆதரவு அளிக்க வேண்டுமென திருத்தந்தை விடுத்த அழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை டாக்காவில் பார்த்தது, கிறிஸ்தவ சமுதாயத்துக்கு மட்டுமல்ல, அனைத்து மதத்தினருக்குமே மகிழ்ச்சியை அளித்தது எனவும், பிரதமர் ஹசீனா அவர்கள் கூறினார்.

பங்களாதேஷ் அரசின் ஒத்துழைப்புடன், அந்நாட்டு கிறிஸ்தவ கழகம், இந்த கிறிஸ்மஸ் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.