சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை

திருத்தந்தையின் 'ஊர்பி எத் ஓர்பி' வாழ்த்துச் செய்தி

'ஊர்பி எத் ஓர்பி' என்ற நண்பகல் வாழ்த்துச் செய்தியை, டிசம்பர், 25, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவன்று, வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ். - AFP

25/12/2017 10:54

டிச.,25,2017. ஆண்டிற்கு இருமுறை, அதாவது, கிறிஸ்து பிறப்பு, மற்றும், கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாக்களில் மட்டும், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவின் மேல்மாடத்திலிருந்து திருத்தந்தையர் வழங்கும் ‘ஊருக்கும் உலகுக்கும்’ என அழைக்கப்படும் 'ஊர்பி எத் ஓர்பி' என்ற நண்பகல் வாழ்த்துச் செய்தியை, இந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழாவன்று, அதாவது, டிசம்பர், 25, இத்திங்களன்று வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் இனிய வாழ்த்துக்கள். பெத்லகேமில் அன்னை மரியாவுக்கு இயேசு பிறந்தார். கடவுள் இவ்வுலகை எவ்வளவு தூரம் அன்புகூர்ந்தார் எனில், தன் ஒரே மகனை இவ்வுலகிற்குத் தந்தார்.

இந்த நிகழ்வை, திரு அவை இன்று புதுப்பிக்கிறது. தன்னையே தாழ்த்தி ஏழ்மை வடிவம் பூண்டு, இறைமகன் மனிதனானார் என்பது, வானகத் தந்தை நம் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு.

மீட்பரின் எளிய மாட்சியைக் கண்ட மரியாவுக்கும், யோசேப்புக்கும் பின்னர், அதனை, முதலில் கண்ட இடையர்களும் எளிமையானவர்களே. வானதூதரின் வார்த்தைகளில் நம்பிக்கைக் கொண்டவர்களாக, இறைவனின் மாட்சியை சாதாரண கண்களால் கண்டு தியானித்தனர், இந்த இடையர்கள்.

போர்களின் காற்று வீசிக்கொண்டிருக்கும் இவ்வுலகில், வளர்ச்சி என்ற பெயரால், மனித குல, சமூக, மற்றும், இயற்கை அழிவுகள் இடம்பெற்றுவரும் சூழலில், இயேசு பாலனைப்போல், இடமின்றி தவிக்கும் சின்னக் குழந்தைகளின் முகங்களில், இயேசுவைக் காண, இன்றைய கிறிஸ்மஸ் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே நிலவும் பதட்ட நிலைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பகுதியில் வாழும் குழந்தைகளில், இயேசுவைப் பார்க்கிறோம். இந்நாளில், எருசலேம் மற்றும் புனித பூமியின் அமைதிக்காக, இறைவனிடம் வேண்டுவோம். பல ஆண்டுகளாக இப்பகுதி எதிர் நோக்கிக் காத்திருக்கும் இணக்க வாழ்வு, நீதி, பாதுகாப்பு ஆகியவைக் கிட்டவும்,  இரு நாடுகளும், அமைதியில், இணக்கத்துடன் வாழவும் உதவ, இறைவனிடம் வேண்டுவோம்.

அதிக இரத்தம் சிந்துதலைக் கண்டுள்ள சிரியாவில், இன்னும் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அங்குள்ள குழந்தைகளில் இயேசுவைக் காண்போம்.  அன்புக்குரிய இந்த நாடு, ஒவ்வொருவரின் மாண்புக்குரிய மதிப்புடன், மீண்டும் கட்டியெழுப்பப்படுவதற்குரிய அர்ப்பணத்தைக் கொண்டிருப்பதாக. கடந்த 15 ஆண்டுகளாக மோதல்களை சந்தித்துவரும் இந்த நாட்டு குழந்தைகளின் முகங்களிலும், மோதல்களின் விளைவாக பசியையும் நோய்களையும் அனுபவித்துவரும் ஏமன் நாட்டு குழந்தைகளின் முகங்களிலும் இயேசுவை அடையாளம் காண்போம்.

ஆப்ரிக்க கண்டத்தின் குழந்தைகளில், குறிப்பாக, தென் சூடான், சொமாலியா, புருண்டி, காங்கோ சனநாயகக் குடியரசு, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, நைஜீரியா ஆகிய நாடுகளின் குழந்தைகளில் இயேசுவைப் பார்ப்போம்.

எங்கெல்லாம், அமைதியும், பாதுகாப்பும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதோ, அங்குள்ள குழந்தைகளின் முகங்களில், இயேசுவைப் பார்ப்போம். கொரிய தீபகற்பத்தில், மோதல் சூழல்கள் அகற்றப்பட்டு, ஒருவருக்கொருவர் நம்பிக்கையில் வாழ, செபிப்போம். வெனெசுவேலா நாட்டில், பல்வேறு சமூகப் பிரிவுகளிடையே, உரையாடல்கள்  துவக்கப்பட்டு, அமைதி பிறப்பதாக. உக்ரைன் நாட்டின் வன்முறைகளால், தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து துன்பங்களை அனுபவிக்கும் குழந்தைகளில், இயேசுவைப் பார்க்கிறோம். இறைவா, இந்நாடுகளுக்கு அமைதியை வழங்கியருளும்.

வேலையின்மையால், தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான, அமைதி நிறைந்த ஒரு வருங்காலத்தை அமைத்துத் தர முடியாத பெற்றோரின் குழந்தைகளில், இயேசுவைப் பார்ப்போம்.

தங்கள் நாட்டை விட்டு தனியாக வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள, மற்றும், வியாபாரப் பொருட்களாக கடத்தப்படும் நிலைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைளில், இயேசுவைக் காண்போம்.

அண்மைத் திருப்பயணத்தின்போது, மியான்மாரிலும், பங்களாதேஷிலும் நான் சந்தித்த குழந்தைகளில், மீண்டும் ஒருமுறை இயேசுவைக் காண்கிறேன். இப்பகுதியின் சிறுபான்மை இனத்தவரின் மாண்பு உறுதிச் செய்யப்பட்டு, உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக. வரவேற்கப்படாமலும், தலைசாய்க்கவும் இடமில்லாமலும் இருப்பதன் வலி, இயேசுவுக்குத் தெரியும். பெத்லகேமில், இயேசு பிறப்பதற்கு கதவுகளைத் திறக்காமல் இருந்த நிலையைப்போல், நம் இதயங்களும், மூடியக் கதவுகளை கொண்டிருக்க வேண்டாம்.

இவ்வாறு, தன் 'ஊர்பி எத் ஓர்பி' வாழ்த்துச் செய்தியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், இக்காலத்தின் குழந்தைகளும், வருங்காலக் குழந்தைகளும், நன்முறையில் வாழ உதவும், மனிதாபிமானம் மிக்க ஓர் உலகை கட்டியெழுப்ப நம்மை அர்ப்பணிப்போமாக, என்ற வேண்டுகோளுடன் அச்செய்தியை நிறைவுச் செய்தார்.

புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்தோருக்கும், வானொலி, தொலைக்காட்சி, மற்றும், ஏனைய சமூகத் தொடர்பு சாதனங்கள் வழியாக தனக்குச் செவிமடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும், கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அனைவருக்கும், சிறப்பான 'ஊர்பி எத் ஓர்பி' ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

25/12/2017 10:54