2017-12-25 10:38:00

கிறிஸ்து பிறப்பு பெருவிழா இரவுத் திருப்பலி மறையுரை


டிச.,25,2017. டிசம்பர் 24, இஞ்ஞாயிறு இரவு, 9.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருவிழிப்புத் திருப்பலியை தலைமையேற்று, நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையை இவ்வாறு வழங்கினார்:

அன்பு சகோதர, சகோதரிகளே, “அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்” (லூக்கா 2:7). என்ற தெளிவான வார்த்தைகளில், உலகின் ஒளியாம் இயேசுவை, அன்னை மரியா நமக்குத் தந்ததை, புனித லூக்கா, எடுத்துரைக்கிறார். இந்த சிறிய வரலாற்றுக் குறிப்பு, வரலாற்றை முற்றிலுமாக மாற்றியது. அந்த இரவில் அனைத்தும் நம்பிக்கையின் ஆதாரமாகியது.

பேரரசரின் அறிவிப்பால், தங்கள் பெயர்களை பதிவு செய்ய, யோசேப்பும் மரியாவும், தங்கள் வீட்டையும் உறவினர்களையும் விட்டு, பயணம் செய்ய வேண்டியதாகியது. குழந்தைப் பேற்றின் இறுதி நாட்களில் இருக்கும் ஒரு தாய்க்கு இத்தகையதொரு பயணம் எளிதானதல்ல. பெத்லகேம் வந்தடைந்தபோது, அவர்களுக்கு அங்கு இடமில்லை. அத்தனை சவால்களையும் எதிர்கொண்ட போதிலும், அன்னை மரியா நமக்கு இம்மானுவேலைத் தந்தார்.

இன்றும், பல இலட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த இடங்களை விட்டு வேறு இடங்களுக்குச் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிலருக்கு இது நம்பிக்கையின் பயணம், பலருக்கோ இது வாழ்வாதாரங்களைத் தேடும் பயணம். நகர்களில் இடமற்ற, மற்றும், விருந்துகளுக்கு அழைக்கப்படாத சாதாரண இடையர்களுக்கு, இயேசுவின் பிறப்பு முதலில் அறிவிக்கப்படுகின்றது. இந்த மக்கள், மற்றவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். சந்தேகக் கண்களுடன் பார்க்கப்பட்டவர்கள். பாவிகளாகவும், புறவினத்தார்களாகவும், வேற்றுக் குடியினராகவும் கண்ணோக்கப்பட்ட  இவர்களுக்கே நற்செய்தியைக் கொணர்கிறார் வானதூதர். ஆம். இந்த மகிழ்வைத்தான் நாமும் கொண்டாட அழைக்கப்பட்டுள்ளோம். புறவினத்தாரும், பாவிகளும், அன்னியருமாகிய நம்மை, தன் முடிவற்ற இரக்கத்தால் அரவணைத்த இறைவன், நாமும் பிறரை அரவணைக்க வேண்டும் எனக் கேட்கிறார்.

இத்தகையச் சூழல்களில் எல்லாம் கிறிஸ்து பிரசன்னமாயிருக்கிறார் என்பதை நம் விசுவாசத்தில் அறிக்கையிடுகிறோம். நம் கதவுகளைத் தட்டும் அன்னியரிலும் அவர் இருக்கிறார். உதவி நாடி வருவோரைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நம் அச்சங்களை, பிறரன்பின் பாலமாக மாற்றுவோம், வரவேற்கும் குணமுடையவர்களாக மாறுவோம். இதைத்தான், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பாலும் கூறினார், 'அஞ்சாதீர்கள். கிறிஸ்துவுக்கென உங்கள் கதவுகளைத் திறந்து வையுங்கள்' என்று.

பெத்லகேமில் பிறந்த குழந்தை வழியாக, கடவுள் நம்மை சந்திக்க வந்து, நம்மை சுற்றியிருக்கும் வாழ்வின் பங்கீட்டாளர்களாக மாற்றுகிறார். அவரை கைகளில் தாங்கி, தூக்கி, அரவணைக்க தன்னை நமக்குக் கையளிக்கிறார். ஏனெனில் தாகமுற்றிருப்போரை, அன்னியரை, உடையின்றிருப்போரை, நோயாளிகளை, கைதிகளை, அவரில் ஏற்று அரவணைக்க தயங்கக்கூடாது என்பதற்காக. இந்தக் குழந்தையில் நாம் நம்பிக்கையின் தூதர்களாக அழைப்புப் பெறுகிறோம். மூடப்பட்ட கதவுகளால் ஏமாற்றமடைந்திருக்கும் மக்களுக்கு, நம்பிக்கை விளக்குகளாக மாறுவோம். இந்தக் குழந்தையில், நாம், இன்முக வரவேற்பின் காரணிகளாக மாறுவோம். பெத்லகேமின் சின்னக் குழந்தையின் அழுகை, நம்மை உலுக்கி, நம் பாராமுகம் எனும் போக்கிலிருந்து நம்மை அகற்றி, துன்புறுவோர் குறித்து நம் கண்களைத் திறக்கட்டும். நம் வாழ்வில், வரலாற்றில், நகர்களில், உதவித் தேடி வருவோரில் உம்மைக் காணும் அழைப்பைப் புரிந்துகொள்ள, குழந்தை இயேசுவே எம் உணர்வுகளை எழுப்பியருளும். நாங்கள் எம் மக்களின் நம்பிக்கை மற்றும் கனிவின் தூதர்களாக செயல்பட பெற்றுள்ள அழைப்பை உணர, குழந்தை இயேசுவே, உம் புரட்சிமிகு கனிவு எம்மைத் தூண்டட்டும்.

இவ்வாறு, கிறிஸ்து பிறப்பு பெருவிழா, இரவுத் திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.