சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை

இயேசுவை ஏற்பதென்பது, துணிச்சல்மிக்க சான்றுகளாக மாறுவதாகும்

புனித ஸ்தேவான் விழாவன்று, மூவேளை செப உரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் - AFP

26/12/2017 14:44

டிச.26,2017. இயேசுவின் செய்தி நம்மைச் சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றது, ஏனென்றால், அச்செய்தி உலகப்போக்குமிக்க சமய அதிகாரத்திற்குச் சவாலாகவும், நம் மனச்சான்றுகளைத் தட்டியெழுப்புவதாகவும் உள்ளது என்றும், இயேசுவின் வருகைக்குப்பின், நம் மனநிலையை மாற்றி, மனந்திரும்ப வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கேட்டுக்கொண்டார்.

புனித ஸ்தேவான் விழாவாகிய டிசம்பர் 26 இச்செவ்வாயன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த, இருபதாயிரத்திற்கு மேற்பட்ட திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, நாம் சிறப்பித்துள்ள இயேசுவின் பிறப்பு பெருவிழாவுக்கும், புனித ஸ்தேவான் விழாவுக்கும் இடையே, மிகவும் உறுதியான பிணைப்பு உள்ளது என்று கூறினார்.

இயேசு, கடவுளின் உண்மையான ஆலயம் என்பதை, புனித ஸ்தேவான் அறிந்திருந்தார் மற்றும், மக்கள் மத்தியில் வந்துள்ள கடவுளின் புதிய பிரசன்னம் பற்றி உறுதியாக நம்பி, அதை அவர் அறிவித்ததால், மக்களின் தலைவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஸ்தேவான், இயேசுவின் ஆவியைப் பெறுவதற்காக அவரிடம் செபித்தார் என்றும், உண்மையில், உயிர்த்த கிறிஸ்துவே ஆண்டவர், நம் மரண நேரத்தில் மட்டுமல்லாமல், வாழ்வின் எல்லா நேரங்களிலும், அவரே, கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே இடைநிலை வகிப்பவர், அவரின்றி நம்மால் எதுவுமே செய்ய இயலாது என்றும் திருத்தந்தை கூறினார்.

இயேசு, இறைத்தந்தையோடு மட்டுமல்லாமல், நம்மை ஒருவர் ஒருவரோடும் ஒப்புரவாக்குகிறார் என்றும், அன்பின் ஊற்றாகிய இயேசு எல்லா மோதல்களையும், கோபத்தையும் அகற்றி, நம் சகோதரர்களோடு ஒன்றித்து வாழச் செய்கின்றார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

கோபம், அருவருப்பானது என்றும், இது, ஏராளமான  தீமையைக் கொணரும் என்றும் நமக்குத் தெரியும், இயேசு இதனை நம்மிடமிருந்து அகற்றுகிறார், நாம், ஒருவர் ஒருவரை அன்புகூரச் செய்கிறார், இது இயேசு ஆற்றும் அற்புதம் என்றும் கூறியத்  திருத்தந்தை, இயேசுவை ஏற்பதென்பது, அவரின் துணிச்சல்மிக்க சான்றுகளாக மாறுவதாகும் என்றும் கூறினார்.

இறைத்தந்தையிலும், நம் அயலவர் மீதுள்ள அன்பிலும் நம்பிக்கை வைப்பதற்கு, நமக்காகப் பிறந்துள்ள இயேசுவிடம் மன்றாடுவோம், இந்த எண்ணம், நம் வாழ்வை மாற்றி, அதை மேலும் மேலும் அழகுள்ளதாயும், மிகவும் பயனுள்ளதாயும் மாற்றும், இதற்கு மறைசாட்சிகளின் அரசியாம் அன்னைமரியின் பரிந்துரையை வேண்டுவோம் எனவும், மூவேளை செப உரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பின்னர், எனக்கு ஏராளமானோர் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் அனுப்புவதென்பது இயலாத காரியம், எனவே எல்லாருக்கும், சிறப்பாக, செபம் எனும் கொடைக்காக நன்றி தெரிவிக்கின்றேன், எனக்காகச் செபிக்க மறக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

26/12/2017 14:44