2017-12-26 15:02:00

இத்தாலிய கர்தினால் பசெத்தி 162 புலம்பெயர்ந்தோரை ஏற்பு


டிச.26,2017. லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த மக்களுக்கு, இத்தாலிய அரசு, மனிதாபிமான வாயிலைத் திறந்துவிட்டதன் பயனாக, ஆப்ரிக்கா மற்றும், மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்த 162 புலம்பெயர்ந்தோரை வரவேற்றுள்ளார், இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் குவால்தியெரோ பசெத்தி.

கர்தினால் பசெத்தி, இத்தாலிய உள்துறை அமைச்சர் மாற்கோ மின்னித்தி ஆகிய இருவரும், கடந்த வாரத்தில் (டிச.22,2017), உரோம் நகருக்கு, 162 புலம்பெயர்ந்தோரை வரவேற்றுள்ளனர்.

பதினாறு இத்தாலிய மறைமாவட்டங்களில் அடைக்கலம் பெறவுள்ள 162 புலம்பெயர்ந்தோரில் பெரும்பாலானவர்கள், பெண்கள், சிறார் மற்றும்  மாற்றுத்திறனாளிகள். 

இவர்களை வரவேற்றது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் பசெத்தி அவர்கள், எங்களின் வீடு, அவர்களின் வீடு என்றும், எங்களின் தாயகம், அவர்களின் தாயகம் என்றும் கூறினார்.

தடுப்புக்காவல் மையங்களில், அடி உதைகளும், சித்ரவதைகளும் பொதுவான நடவடிக்கைகளாக உள்ளவேளை, இங்கிருந்து 162 பேர் விடுவிக்கப்பட்டு, இரு விமானங்களில் உரோம் நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் புலம்பெயர்ந்தோர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிவரும் இத்தாலிய அரசு, இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரில் பத்தாயிரம் பேரை, அடுத்த ஆண்டில் ஏற்பதற்கு உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : Avvenire /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.