2017-12-26 14:49:00

புனித சவேரியாரின் புனிதக் கை கானடாவின் 14 நகரங்களில்..


டிச.26,2017. உரோம் இயேசு சபையினரின் ஜேசு ஆலயத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும், புனித பிரான்சிஸ் சவேரியாரின் வலது கை, அடுத்த ஆண்டில், ஒரு மாத காலத்திற்கு, கானடா நாட்டின் 14 நகரங்களில் திருப்பவனியாக எடுத்துச் செல்லப்படவிருக்கின்றது.

புனித சவேரியாரின் வலது கை, 2018ம் ஆண்டு சனவரி 3ம் தேதி முதல், பிப்ரவரி 2ம் தேதி வரை, கானடாவின் 14 நகரங்களில் திருப்பவனியாக எடுத்துச் செல்லப்படும்.

கானடாவின் ஒட்டாவா உயர்மறைமாவட்டத்தின் இயேசு சபையினர், “Catholic Christian Outreach” எனப்படும், நற்செய்தி அறிவிப்பில் ஈடுபட்டிருக்கும் கானடா பல்கலைக்கழகத்தின் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின் அங்கத்தினர், ஆகியோரின் முயற்சியால், புனித சவேரியாரின் கை, கானடாவிற்குச் செல்லவிருக்கின்றது.

2017ம் ஆண்டில், ஒட்டாவா உயர்மறைமாவட்டம் 170 ஆண்டுகளையும், கானடாவின் கூட்டுக்கழகம் 150 ஆண்டுகளையும் நிறைவு செய்வதை முன்னிட்டு, இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

உரோம் இயேசு சபையினரின் பாப்பிறை விவிலிய நிறுவனத்தின் தலைவராகிய, கானடா நாட்டு இயேசு சபை அருள்பணியாளர் Michael Kolarcik அவர்கள், புனித சவேரியாரின் வலது கையை கானடாவுக்கு எடுத்துச் செல்வார்.

புனித சவேரியார், சீனாவுக்கு நற்செய்திப் பணியாற்றச் செல்வதற்காகக் காத்திருந்த சமயம், விஷக்காய்ச்சலால் தாக்கப்பட்டு, 1552ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி காலமானார். அவர் இறந்தபின், அவரின் உடல், இந்தியாவின் கோவாவில் வைக்கப்பட்டுள்ளது. அக்காலத்திய இயேசு சபையின் உலகளாவிய தலைவரின் வேண்டுகோளின்பேரில், இப்புனிதரின் வலது கை உரோமைக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும், வலது தோளின் ஓர் எலும்பு, மக்காவோவின் கொலேன் தீவில் வைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.