2017-12-28 13:57:00

பாசமுள்ள பார்வையில்.. பெருமைமிகு அன்னையர்


ஒரு சமயம், பவேரியா நாட்டுத் தலைவருக்கும், ஜெர்மன் பேரரசருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஜெர்மன் பேரரசர், பவேரியத் தலைநகரைத் தரைமட்டமாக்க விரும்பி, படைகளைத் திரட்டிக்கொண்டுபோய் தலைநகரை முற்றுகையிட்டார். ஆனாலும் அச்சமயத்தில், அவர் மனதின் ஓரத்தில் சிறிது இரக்கம் சுரந்தது. உடனே பேரரசர், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டும் விதிவிலக்கு அளிக்கிறேன். ஒவ்வொருவரும், தங்கள் முதுகில் சுமக்கக்கூடிய அளவு பொருள்களை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என்று, ஓர் அறிவிப்பு கொடுத்தார். அதன்பிறகு, தன்னுடைய படைத்தலைவர்களை அழைத்து, பெண்களெல்லாம் தட்டுமுட்டுச் சாமான்களுடன் தலைநகரைவிட்டு வெளியேறிய பின்னர், அந்நகரைக் கொளுத்தி விடுங்கள் என்று கட்டளையிட்டார். ஜெர்மன் பேரரசரின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திற்குள், பவேரியப் பெண்கள் எல்லாரும் ஒவ்வொருவராக, தட்டுத்தடுமாறி நகரைவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த பேரரசருக்கு பேரதிர்ச்சி. ஏனென்றால், அப்பெண்கள் அனைவரும் தங்களின் முதுகுகளில், வீட்டுப் பொருள்களைச் சுமந்து செல்லாமல், தங்கள் தங்கள் கணவர்களைச் சுமந்து சென்றுகொண்டிருந்தனர். கடைசியாக, பவேரியா நாட்டு அரசியும், அந்நாட்டு மன்னரை முதுகில் சுமந்தபடி, தள்ளாடி நடந்து வந்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த ஜெர்மன் பேரரசர் மனது இளகி, பவேரியாவுக்கு மன்னிப்பு அளித்துவிட்டு, படைகளை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். இத்தகைய பண்புள்ளவர்கள்தான் தாய்மார். இவர்கள், பெண்குலப் பெருமைகள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.