2017-12-29 14:46:00

இறையியலைப் படித்திராத சாதாரண மக்கள்மீது அக்கறை காட்ட...


டிச.29,2017. இறையியலை வியப்புக்குரியதாய் அமைக்குமாறும், இவ்வாறு அமைப்பதற்குரிய முயற்சியில் சோர்ந்துபோக வேண்டாமென்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய இறையியலாளர் குழு ஒன்றிடம், இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார்.

தனது பொன் விழாவைச் சிறப்பிக்கும், இத்தாலிய இறையியல் கழகத்தின் ஏறத்தாழ நூறு பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையியலாளர்களுக்குத் தேவையான மூன்று முக்கிய கூறுகள் பற்றிச் சொல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்.

தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உரையை வழங்கிய பின்னர், இவ்வாறு உரைத்த திருத்தந்தை, திருஅவையின் மாபெரும் தந்தையர்கள் போன்று, இறையியலாளர், செபச் சூழலில் செயல்பட வேண்டுமென்றும் பரிந்துரைத்தார்.

திருஅவையின் மாபெரும் தந்தையர்கள், சிந்தித்தார்கள், செபித்தார்கள், இறைவனைப் போற்றினார்கள், இந்த நிலையே, அனைத்து கிறிஸ்தவ இறையியலின் வளர்ச்சிக்கு அடித்தளம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மூன்றாவதாக, தான் ஏற்கனவே கூறியிருப்பதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன் என்றுரைத்த திருத்தந்தை, கல்விக்கூடங்களில் இறையியலை ஒருபோதும் படித்திராத சாதாரண இறைமக்கள் மீது அக்கறை காட்ட வேண்டுமென, இறையியலாளர்களைக் கேட்டுக்கொண்டார். 

இந்த இறையியல் கழகம், தற்போது 330க்கும் மேற்பட்ட இறையியலாளர்களைக் கொண்டிருக்கும்வேளை, இறையியல் பணியில், கழகமாக ஒன்றிணைந்து செயல்படுமாறும் கூறியத் திருத்தந்தை, நற்செய்தியைப் புதிய வழியில் அறிவிப்பதற்கு, திருஅவைக்கு அழைப்பு விடுக்கும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கப் போதனைகளுக்கு விசுவாசமாக இருந்து பணியாற்றுமாறும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.