2017-12-29 14:56:00

உலகத் தாராளமயமாக்கல் கொள்கை, மிக வறிய நாடுகளில் தோல்வி


டிச.29,2017. உலகத் தாராளமயமாக்கல் கொள்கை, மிக வறிய நாடுகளுக்கும், தொழிற்சாலைப் பணியாளர்களுக்கும் தோல்வியை வருவித்துள்ளது என்று, திருப்பீடச் சார்பு தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ கூறியுள்ளது.

உலகத் தாராளமயமாக்கல் கொள்கை பற்றி, கடந்த ஆண்டில் வெளியான பல்வேறு அறிக்கைகளை வைத்து, இவ்வாறு கூறியுள்ளார், லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாளின் உதவி ஆசிரியர், ஜூசப்பே ஃபியோரென்தினோ.

மிக ஏழை நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும் என்று வழங்கப்பட்ட உறுதி, ஏமாற்றத்தையே கொண்டுவந்துள்ளது என்று கூறியுள்ள பியோரென்தினோ அவர்கள், ஐரோப்பாவில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாராளமயமாக்கல் கொள்கையால், பன்னாட்டு நிறுவனங்களும், உலகின் பணக்கார மனிதர்களுமே பயனைடந்துள்ளனர் என்றும், பியோரென்தினோ அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், ‘99 விழுக்காட்டுக்குப் பொருளாதாரம்’ என்ற தலைப்பில், ஆக்ஸ்ஃபாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில், 360 கோடி மக்கள் கொண்டிருக்கும் சொத்தின் அளவை, எட்டுப் பணக்காரர்கள் கொண்டிருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Oss.Rom /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.