2017-12-29 15:06:00

துன்புறுவோரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர்களாக வாழ...


டிச.29,2017. இந்தியாவில், 2008ம் ஆண்டில் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறைக்குப் பலியானவர்கள், மறைசாட்சிகள் என்று, இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

திருப்பீட சீர்திருத்தத்தில், திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும், C9 எனப்படும், கர்தினால்கள் அவையின் உறுப்பினராகிய, மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், அண்மையில் வத்திக்கானுக்கு வந்திருந்த சமயம், இவ்வாறு தெரிவித்தார்.

ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில், இந்து தீவிரவாதிகளின் வன்முறைக்குப் பலியானவர்களின் குடும்பங்கள், மற்றும், அதில் பாதிக்கப்பட்டவர்களை நேரிடையாகச் சந்தித்து, அம்மக்களின் துயரங்களைக் கேட்டறிந்ததாகவும் கூறினார், கர்தினால் கிரேசியஸ்.

துன்புறும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்று கூறிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், 2008ம் ஆண்டில் கந்தமாலில் வன்முறைக்குப் பலியான கிறிஸ்தவர்களை, மறைசாட்சிகள் என அறிவிப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு, தான் ஆதரவளிப்பதாகவும் கூறினார்.

2008ம் ஆண்டில் கந்தமால் மாவட்டத்தில் இடம்பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையில், ஏறக்குறைய நூறு பேர் உயிரிழந்தனர் மற்றும், 56 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.