2017-12-29 15:12:00

மியான்மாரில் 50 ஆண்டுகளுக்குப் பின் பொதுவில் கிறிஸ்மஸ்


டிச.29,2017. மியான்மார் கிறிஸ்தவ சமூகங்கள், ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், முதன்முறையாக இவ்வாண்டு கிறிஸ்மஸ் பெருவிழாவை, தெருக்களில் சிறப்பித்துள்ளனர் என்று, பீதேஸ் செய்தி கூறியது.

2016ம் ஆண்டு கிறிஸ்மஸ் பெருவிழாத் திருப்பலிகள், வழிபாடுகள், பவனிகள் போன்றவை, ஆலயங்களுக்குள்ளே சிறப்பிக்கப்பட்டவேளை, இவ்வாண்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள், யாங்கூன் தெருக்களிலும் சிறப்பிக்கப்பட்டுள்ளன.

யாங்கூன் மாநில அதிகாரிகளின் சிறப்பு அனுமதியுடன், டிசம்பர் 23ம் தேதி முதல், 25ம் தேதி வரை, கத்தோலிக்கரும், பிரிந்த கிறிஸ்த சபையினரும், யாங்கூன் மாநகரத்தின் பொதுவிடங்களிலும், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைச் சிறப்பித்துள்ளனர்.

மெத்தடிஸ்ட் மூவொரு இறைவன் கிறிஸ்தவ சபை ஆலயத்தில், டிசம்பர் 23ம் தேதி ஆரம்பித்து வைக்கப்பட்ட கொண்டாட்டங்கள், டிசம்பர் 25ம் தேதி, யாங்கூன் அமல மரி கத்தோலிக்க பேராலயத்தில் நிறைவடைந்தன என்று, பீதேஸ் செய்தி கூறுகின்றது.

மியான்மார் நாட்டின் உதவி அரசுத்தலைவர் Henry Van Thio அவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய யாங்கூன் உயர்மறைமாவட்ட துணை ஆயர், John Saw Yaw Han அவர்கள், நாட்டின் அமைதி மற்றும் வளமைக்கு, ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

2017ம் ஆண்டு நவம்பரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மியான்மாருக்கு மேற்கொண்ட திருத்தூதுப்பயணத்தைக் கவுரவிக்கும் விதமாகவும், மியான்மார் மற்றும் உலகின் கிறிஸ்தவர்களோடு ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் நோக்கத்திலும், யாங்கூன் மாநில முதலமைச்சர் Phyo Min Thein, யாங்கூன் மேயர் Mg Mg Soe ஆகியோரின் அனுமதியின்பேரில், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் சிறப்பிக்கப்பட்டன.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.