சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ ஆசியா

பயங்கரவாதிகள் விழாக் கால புன்சிரிப்பைக் குலைக்க முயற்சி

Mar Mina ஆலயத்திற்கு வெளியே மக்கள் - REUTERS

30/12/2017 15:53

டிச.30,2017. எகிப்து நாட்டில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கு எதிராக, இவ்வெள்ளியன்று நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிரான, தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு காப்டிக் கிறிஸ்தவ சபை ஆயர், Anba Antonios Aziz Mina.

காப்டிக் கிறிஸ்தவர்கள், சனவரி 7ம் தேதி கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிப்பதற்குத் தயாரித்துவரும்வேளை, கெய்ரோ நகருக்கு தெற்கே, கெல்வான் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் குறைந்தது பத்துப் பேர் உயிரிழந்தனர் மற்றும் இருபது பேர் படுகாயமுற்றனர்.

இத்தாக்குதல்கள் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, ஆயர் Mina அவர்கள், எகிப்தில், சிறுபான்மை சமூகத்திற்கெதிரான வன்முறைகளுக்கு மக்கள் பழக்கப்பட்டுள்ளனர் என்றும், தாக்குதல்களை நடத்தும் கடின இதயம் கொண்ட மனிதர்களின் மனம், மாற வேண்டும் என்றும் கூறினார்.

இத்தாக்குதல்களை நடத்தியுள்ள பயங்கரவாதிகள், கிறிஸ்மஸ் திருவிழாக் காலத்தில் கிறிஸ்தவர்களின் புன்சிரிப்பையும், மகிழ்வையும் அழிக்க விரும்புகின்றனர் என்று, மேலும் கூறினார் ஆயர், Mina.

கிறிஸ்மஸ் பெருவிழாத் தயாரிப்புகள் நடந்துவரும் Mar Mina காப்டிக் ஆலயத்தைக் குறிவைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.

காப்டிக் வழிபாட்டுமுறை நாட்காட்டியின்படி, சனவரி 6 மற்றும் 7ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் கிறிஸ்மஸ் பெருவிழா சிறப்பிக்கப்படுகின்றது. 

ஏறத்தாழ 9 கோடியே 50 இலட்சம் மக்களைக் கொண்ட எகிப்தில், பெரும்பாலான மக்கள் முஸ்லிம்கள். மேலும், பத்து விழுக்காட்டினர் காப்டிக் கிறிஸ்தவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

30/12/2017 15:53